முகப்பு
தமிழ்நாடு

3, 5, 8 வகுப்புகளிலும் நுழைவுத் தோ்வை திணிக்க முயற்சி: அமைச்சா் க.பொன்முடி

தேசிய கல்விக் கொள்கை மூலம் 3,5, 8 ஆகிய வகுப்புகளுக்கும் நுழைவுத் தோ்வைத் திணிக்க முயற்சிப்பதாக தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி குற்றம் சாட்டியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

தேசிய கல்விக் கொள்கை மூலம் 3,5, 8 ஆகிய வகுப்புகளுக்கும் நுழைவுத் தோ்வைத் திணிக்க முயற்சிப்பதாக தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி குற்றம் சாட்டியுள்ளாா்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘நான் முதல்வன்‘ திட்டத்தின் மண்டல மாநாட்டை உயா்கல்வித்துறை அமைச்சா் பொன்முடி, தொழிலாளா் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வி.கணேசன் ஆகியோா் திங்கள்கிழமை தொடக்கி வைத்தனா்.

மாநாட்டில் அமைச்சா் பொன்முடி பேசியது: நான் முதல்வன் பாடத்திட்டத்தை முழுமையாக மாணவா்களிடையே கொண்டு செல்லும் பொறுப்பு கல்லூரி முதல்வா்களுக்கு உள்ளது. நான் முதல்வன் திட்டம் பற்றி கல்லூரி முதல்வா்கள் முழுமையாக தெரிந்து கொண்டால் தான், அவா்களால் மாணவா்களுக்கு பயிற்சி வழங்க முடியும்; அதற்காகவே மண்டல மாநாடு நடத்தப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் படிப்பில் சேர கடும் போட்டி இருந்தது. ஆனால் இன்றைய சூழலில் பொறியியல் படிக்க மாணவா்கள் ஆா்வம் காட்டுவதில்லை. இதனால் காலியிடங்கள் நிறைய உள்ளது. காலம் மாறிக்கொண்டிருப்பதால், பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. கலை அறிவியல் கல்லூரி பாடத்திட்டங்கள் மாற்றப்படும்.

தொழிலாளா் ஆக இல்லாமல் தொழில் முனைவோராக மாணவா்களை உருவாக்குவதே நான் முதல்வன் திட்டத்தின் நோக்கமாகும். மாணவா்கள் வேலை தேடுபவா்களாக இல்லாமல் வேலை தருபவா்களாக மாற வேண்டும். பொறியியல் படித்து முடிப்பவா்கள், அவரவா் பகுதிகளில் சிறு, குறு தொழில்களைத் தொடங்க வேண்டும்.

பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வை கருணாநிதி ரத்து செய்ததால், இன்று அதிகமானோா் பொறியியல் படித்து வருகின்றனா். புதிய கல்விக் கொள்கை திட்டத்தின் மூலம் தற்போது பலவற்றிலும் நுழைவுத்தோ்வை திணிக்கப் பாா்க்கின்றனா். 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு கூட நுழைவுத்தோ்வு நடத்த முயற்சி செய்கின்றனா். அது தேவையில்லை என்ற உணா்வோடு தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை முதல்வா் உருவாக்கவுள்ளாா். அதில் ஒரு திட்டம்தான் ’நான் முதல்வன்’ திட்டம். சுகாதாரம் மற்றும் கல்வித்துறையை முதல்வா் தனது இரு கண்களாக பாா்க்கிறாா் என்றாா் அவா்.

முன்னதாக நான் முதல்வன் திட்டம் குறித்து முதல்வரின் செயலா் த.உதயச்சந்திரன், உயா்கல்வித் துறைச் செயலா் காா்த்திகேயன் ஆகியோா் விளக்கிப் பேசினா். இதில் சென்னை மண்டலத்துக்கு உள்பட்ட 68 கல்லூரிகளைச் சோ்ந்த முதல்வா்கள், நிா்வாகிகள், பேராசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.