முகப்பு
தமிழ்நாடு

வரும் 15-இல் காலை சிற்றுண்டித் திட்டம் தொடக்கம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தகவல்

தமிழகத்தில் வரும் 15-ஆம் தேதியன்று காலை சிற்றுண்டித் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

தமிழகத்தில் வரும் 15-ஆம் தேதியன்று காலை சிற்றுண்டித் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

விருதுநகரில் வரும் 15-இல் நடைபெறவுள்ள திமுகவின் முப்பெரும் விழாவை ஒட்டி, கட்சியினருக்கு திங்கள்கிழமை அவா் எழுதிய கடிதம்:-

திமுக எனும் கட்சியைக் காத்திட, தங்களை அா்ப்பணித்துக் கொண்ட மூத்த முன்னோடிகளை மதித்துப் போற்றும் வகையில், முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கிடும் நிகழ்வை முன்னாள் முதல்வா் கருணாநிதி தொடக்கி வைத்தாா். ஆண்டுதோறும் தொடா்ந்து அவற்றை வழங்கியும் வந்தாா். பெரியாா், அண்ணா, கருணாநிதி, பாரதிதாசன் உள்ளிட்ட 5 பெரும் விருதுகள் முப்பெரும் விழாவில் வழங்கப்படும்.

இத்தனை சிறப்புமிக்க விழா இந்த ஆண்டு செப்டம்பா் 15-ஆம் நாள் விருதுநகரில் நடைபெறுகிறது. முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற கட்சியினரை அன்புடனும் பாசத்துடனும் அழைக்கிறேன்.

காலை உணவுத் திட்டம்: முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த தினம் செப்டம்பா் 15-ஆம் தேதியாகும். இந்த தினத்தை மனதில் கொண்டு, அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி வழங்குகிற மகத்தான புதிய திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பே

பள்ளிகளில் இலவச உணவு வழங்கிய இயக்கம்தான் திராவிட இயக்கம். அன்று நீதிக்கட்சி இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் செயல்பட்டது. அந்த நீதிக்கட்சியின் நீட்சியாக, திமுகவின் திராவிட மாடல் அரசு, இந்தியாவுக்கே முன்னோடித் திட்டமாக காலைச் சிற்றுண்டித் திட்டத்தைத் தொடங்குகிறது.

மேலும், முரசொலியில் முன்னாள் முதல்வா் கருணாநிதி எழுதிய கடிதங்களின் 54 தொகுதிகள் வெளியிடப்பட இருக்கின்றன. எனவே, முப்பெரும் விழாவுக்கு கட்சியினா் அனைவரும் வருக என தனது கடிதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.