தமிழ்நாடு

பேளூர் அரசு சுகாதார நிலையத்திற்கு தேசிய தரச் சான்றிதழ்: மா.சுப்பிரமணியன்

DIN

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூரில் போதிய அடிப்படை வசதிகளுடன் சிறப்பாக இயங்கி வரும் வட்டார அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு தேசிய தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

வாழப்பாடி வட்டத்திற்கு உட்பட்ட பேளூரில், இப்பகுதி மக்களுக்கு அடிப்படை சிகிச்சை அளிப்பதற்காக, 1973ம் ஆண்டு டேணிடா திட்டத்தின் கீழ்  சுகாதார மையம் அமைக்கப்பட்டது. 4 ஆண்டுக்குப் பிறகு அரசு ஆரம்பச் சுகாதார நிலையமாக மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து,, மருத்துவர், செவிலியர் மற்றும் பணியாளர்கள் குடியிருப்புகள், புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு கட்டடங்கள் அமைக்கப்பட்டது. இதுமட்டுமின்றி, வாழப்பாடி, திருமனுார் மற்றும் பேளூர் ஆரம்பச் சுகாதார நிலையங்களைக் கட்டுப்படுத்தி இயக்கும் வட்டார சுகாதார நிலைய அந்தஸ்தும் வழங்கப்பட்டது. 

இந்த வட்டார அரசு ஆரம்பச்  சுகாதார நிலையத்தில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், கர்ப்பிணிப்பெண்கள் சிகிச்சை பெறுவது அதிகரித்ததால், கடந்த 2016ல் 30 படுக்கையுடன் கூடிய அரசு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாகத் தரம் உயர்த்தப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு முன் வாழப்பாடியைச் சேர்ந்த மருத்துவ அலுவலர் சி.பொன்னம்பலம் வட்டார மருத்துவ அலுவலராக நியமிக்கப்பட்டார். இவரது ஒருங்கிணைப்பால், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள், பொதுமக்கள் ஒத்துழைப்போடு, ஆரம்பச் சுகாதார நிலைய வளாகம் மிக நேர்த்தியாக புதுப்பிக்கப்பட்டது.

அரசு சுகாதாரத்துறை, அரசு சாரா நிறுவனங்கள், பெரு நிறுவனங்களை அணுகி இந்த ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்பு  வசதிகளும் ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆரம்பச் சுகாதார நிலையத்தில் நாளொன்றுக்குச் சராசரியாக 300 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு சிகிச்சை பெறும் பயனாளிகளின் அனைத்து விபரங்களும், மத்திய அரசின், நவீனமாக்கும் திட்டத்தின் கீழ் கணினியில் பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது. 

இதுமட்டுமின்றி, இந்த சுகாதார நிலைய வளாகத்தில் இயற்கை முறை மருத்துவமாகும் எண்  ‘8‘ வடிவ நடைப்பயிற்சி திடல், மூலிகைத் தோட்டம், பயாளிகள் ஓய்வறை, கரோனா சளி மாதிரி சேகர கூடாரம், கர்ப்பிணிகளுக்கான பிரத்யோக சிகிச்சை அரங்கு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தின் செயல்பாட்டைக் கண்ட சிங்கிபுரம்  சிமெண்ட் தொழிற்சாலை  மற்றும் முத்தம்பட்டி தனியார் பால் பண்ணை நிறுவனங்கள், வளாகம் முழுவதும் தரைதளம் அமைத்துக் கொடுத்துள்ளனர். 

பொதுமக்களை மகிழ்விக்க அமைக்கப்பட்டுள்ள தாமரைக் குளம்

இதுமட்டுமின்றி, சிகிச்சை பெற வரும் பயனாளிகளை வரவேற்கும் வகையில், வேறெந்த சுகாதார நிலையத்திலும் இல்லாத வகையில், நுழைவு வாயிலில் தாமரைக்குளமும், புல்வெளி பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், பேளூர் அரசு ஆரம்பச் சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனையை விஞ்சும் வகையில், கனிவான மருத்துவ சேவை வழங்கும் நோய் தீர்க்கும் பூங்காவாக மாறியது. 

இந்த சுகாதார நிலையத்திற்கு மதிப்பீடு செய்த தேசிய தரக் கட்டுப்பாட்டு நிறுவனம், தரக்கட்டுப்பாட்டை உறுதி செய்தது. திங்கள்கிழமை சென்னையில் நடைபெற்ற விழாவில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்,  பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் சி. பொன்னம்பலத்திடம் தேசிய தரச் சான்றிதழை வழங்கி பாராட்டினார்.

தேசிய தரச் சான்றிதழ் பெற்ற பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமையிலான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு, மாவட்ட சுகாதாரத்துறை உயரதிகாரிகள், வாழப்பாடி அரிமா சங்கம், நெஸ்ட் அறக்கட்டளை, இலக்கியப் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT