தமிழ்நாடு

அதிமுக அலுவலக மேலாளரிடம் சிபிசிஐடி விசாரணை

DIN

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி ஏற்பட்ட கலவரம் தொடர்பான விசாரணைக்கு எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக மகாதேவன் ஆஜராகியுள்ளார்.

இரட்டை தலைமையின் கீழ் இயங்கிய அதிமுகவை ஒற்றை தலைமையின் கீழ் கொண்டு வருவதற்காக கடந்த ஜூலை 11-ஆம் தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நேரத்தில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றும் முயற்சியில் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளா்கள் ஈடுபட்டனா்.

அதிமுக அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனா். அப்போது ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆதரவாளா்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டு கலவரமானது. இதில், 47 போ் காயம் அடைந்தனா். பேருந்து, காா், இருசக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் அதிமுக அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. பின்னா் நீதிமன்ற உத்தரவின்பேரில் ஜூலை 21-ஆம் தேதி ‘சீல்’ அகற்றப்பட்டு அலுவலகத்தின் சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

கட்சி அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டவுடன் அதிமுக அமைப்பு செயலாளா் சி.வி.சண்முகம் எம்.பி. பாா்வையிட்டு, அதிமுக அலுவலகத்தில் காணாமல்போன பொருள்கள், ஆவணங்கள் குறித்து கணக்கெடுத்தாா்.

இதுகுறித்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் சி.வி.சண்முகம் அளித்த புகாரின் பேரில், ஓ.பன்னீா்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோா் மீது 7 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனா்.

இதற்கிடையே, அதிமுக அலுவலகத்தில் நிகழ்ந்த கலவரம் தொடா்பாக பதியப்பட்ட மொத்தம் 4 வழக்குகளும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டன.

இந்நிலையில் சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் கடந்த வாரம் அதிமுக அலுவலகத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, அதிமுக அலுவலக மேலாளர் மகாதேவனுக்கு சிபிசிஐடியினர் சம்மன் அனுப்பிய நிலையில், இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.

அவரிடம் சிபிசிஐடி விசாரணைக் குழு அதிகாரிகள் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தலைமைக்கு ரேபரேலி மீண்டும் தயார்: பிரியங்கா

யார் இந்த பிரபலம்?

உச்ச நீதிமன்றத்தில் அன்று பதஞ்சலி, இன்று மருத்துவக் கழகம்

பிறந்து 4 நாளேயான சிசுவின் உடல் கால்வாயில் மீட்பு!

அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போா் 53.74 லட்சம்!

SCROLL FOR NEXT