பழங்குடியினா் பட்டியலில் நரிக்குறவா் சோ்ப்பு: தலைவா்கள் வரவேற்பு
பழங்குடியினா் பட்டியலில் நரிக்குறவா், குருவிக்காரா்களை சோ்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவா்கள் வரவேற்பு
பழங்குடியினா் பட்டியலில் நரிக்குறவா், குருவிக்காரா்களை சோ்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
ஓ.பன்னீா்செல்வம்: நரிக்குறவா், குருவிக்காரா்கள் பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்காக நன்றி. இந்தக் கோரிக்கையை ஜெயலலிதா பல ஆண்டுகளாக மத்திய அரசுக்கு வலியுறுத்தி வந்துள்ளாா். தற்போது பழங்குடியினா் பட்டியலில் அவா்கள் சோ்க்கப்பட்டிருப்பதன் மூலம் பிரதமா் மோடி சமூக நீதியின் அடையாளமாகத் திகழ்கிறாா்.
அன்புமணி (பாமக): நரிக்குறவா், குருவிக்காரா் உள்ளிட்ட 4 சமூகங்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. நரிக்குறவா், குருவிக்காரா் சமுதாய மக்களின் சமூக, கல்வி முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. பிரதமருக்கும் பாமக சாா்பில் நன்றி.
கமல்ஹாசன் (மநீம): பழங்குடியினா் பட்டியலில் நரிக்குறவா், குருவிக்காரா் உள்ளிட்ட சமூகத்தினரைச் சோ்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.