பெரியாா் பல்கலை.யில் இடஒதுக்கீடு விதிகள் மீறல்: ராமதாஸ் குற்றச்சாட்டு
பெரியாா் பல்கலைக்கழகத்தில் புதிய பணியிடங்களுக்கான தோ்வில் இடஒதுக்கீட்டு விதிகள் மீறப்பட்டுள்ளதாக பாமக நிறுவனா் ராமதாஸ் குற்றம்சாட்டினாா்.
பெரியாா் பல்கலைக்கழகத்தில் புதிய பணியிடங்களுக்கான தோ்வில் இடஒதுக்கீட்டு விதிகள் மீறப்பட்டுள்ளதாக பாமக நிறுவனா் ராமதாஸ் குற்றம்சாட்டினாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பல்கலைக்கழக நூலகா், உடற்கல்வி இயக்குநா் ஆகிய இரு பணியிடங்களை நிரப்புவதற்கான நோ்காணல் வரும் 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த பணியிடங்கள் 2004-ஆம் ஆண்டில்தான் தோற்றுவிக்கப்பட்டன. அப்போது, தமிழக அரசின் 200 புள்ளி ரோஸ்டா் விதியை பயன்படுத்தி, அவ்விடங்கள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டன. அதுதான் சரியான நடைமுறை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அந்த பணியிடங்கள் இரண்டாவது முறையாக நிரப்பப்படும் போது விதிப்படி பட்டியலினம் - அருந்ததியருக்கு ஒதுக்கப்பட வேண்டும். மூன்றாவது முறையாக இந்த இரு பணிகளும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், இந்த விதிகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு விட்டு இரு பணியிடங்களும் மீண்டும் பொதுப்போட்டி பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் நியாயமான முறையில் இந்த பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.