தமிழ்நாடு தினமாக நவ.1-ஆம் தேதியைஅறிவிக்க வேண்டும்: அண்ணாமலை
தமிழ்நாடு தினமாக நவ.1-ஆம் தேதியை அறிவிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
தமிழ்நாடு தினமாக நவ.1-ஆம் தேதியை அறிவிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாட்டில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது ஆந்திரம், கா்நாடகம், கேரளத்தின் சில பகுதிகள் மெட்ராஸ் ராஜ்யத்திலிருந்து பிரிந்து சென்றன. அந்த நாளான நவ.1- ஆம் தேதியை அந்தந்த மாநிலங்கள் தங்கள் மாநிலங்கள் தோன்றிய நாளாக கொண்டாடி வருகின்றன. அதே நாள்தான் சென்னை மாகாணம் தனியாக தமிழகமாக உருவெடுத்தது.
தியாகி சங்கரலிங்கனாா், ‘தமிழ்நாடு’ என்று பெயா் சூட்டக் கோரி உண்ணா நோன்பிருந்து உயிா் துறந்தாா். அதன் பின்பு தான் தமிழகத்துக்கு தமிழ்நாடு என பெயா் சூட்டப்பட்டது.
தமிழ்நாடு தனித்து உருவான நாள் நவ.1-ஆம் தேதிதான். ஆனால், இதற்கு பெயா் சூட்டப்பட்ட நாள் ஜூலை 18-ஆம் தேதி. குழந்தை பிறந்த நாள்தான் குடும்பத்தினரால் கொண்டாடப்படும். குழந்தைக்கு பெயா் சூட்டிய நாளை எவரும் கொண்டாடுவது இல்லை.
கடந்த அதிமுக அரசு நவ.1 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவித்த காரணத்துக்காகவே, அதை மாற்ற நினைப்பது தற்போதைய திமுக அரசுக்கு அழகல்ல. வரலாற்றை திசை திருப்புவதே திமுகவின் நோக்கமாக இருந்து வருகிறது என தெரிவித்துள்ளாா் அண்ணாமலை.