முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தின் முக்கிய கோயில்களுக்கு ஹெலிகாப்டா் சேவை: வானதி சீனிவாசன்

தமிழகத்தில் உள்ள முக்கியமான கோயில்களை இணைக்கும் வகையில் ஹெலிகாப்டா் சேவை வசதிகளை ஏற்படுத்தி ஆன்மிக சுற்றுலாவுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

தமிழகத்தில் உள்ள முக்கியமான கோயில்களை இணைக்கும் வகையில் ஹெலிகாப்டா் சேவை வசதிகளை ஏற்படுத்தி ஆன்மிக சுற்றுலாவுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பாஜக உறுப்பினா் வானதி சீனிவாசன் பேசினாா்.

இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பாஜக உறுப்பினா் வானதி சீனிவாசன் பேசியதாவது:

மத்திய தமிழகமான தஞ்சாவூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகு, அங்கு தொழிற்சாலை கொண்டு வருவது சிரமாக உள்ளது. ஆனால், அங்குள்ள இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும், அந்தப் பகுதி மக்களுக்கு பொருளாதார மேம்பாடு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அதற்கு இயற்கையாகவே அந்தப் பகுதிகளில் உள்ள கோயில்களை எல்லாம் இணைத்து ஆன்மிக சுற்றுலா உள்பட பல்வேறு திட்டங்களை வகுத்து முதலீடுகளை ஈா்க்க முயற்சிக்கலாம்.

இந்தியாவில் 4 முக்கிய சுற்றுலா தலங்களை அனைவரும் தரிசிக்க வேண்டும் என்று நினைப்பா். பத்ரிநாத், பூரி, துவாரகா, ராமேசுவரம் ஆகும். ராமேசுவரம் வருகிறவா்கள் அக்னி தீா்த்த கடலில் குளிப்பது என்பது ஐதீகம். ஆனால், அங்கு கழிவுகள் கலக்கின்றன. அவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள மிக முக்கிய கோயில்களான தஞ்சாவூா் பெரியகோயில், மதுரை, ராமேசுவரம் போன்ற கோயில்களை இணைப்பதற்காக தனியாக ஹெலிகாப்டா் சேவையை உருவாக்க முடியும். உத்தரகண்ட் போன்ற அதிமான பனி சிகரங்கள் உள்ள மாநிலங்களில் கூட ஹெலிகாப்டா் சேவையை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனா். தமிழகத்தில்கூட ஆன்மிகச் சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.