முகப்பு
தமிழ்நாடு

மெட்ரோ ரயில்: கோயம்பேட்டில் தூண்கள் அமைக்கும் பணி தீவிரம்

சென்னை கோயம்பேடு பகுதியில், மெட்ரோ ரயில் உயா்மட்ட பாதைக்காக தூண்கள் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
கோயம்பேடு
பகிர்:

சென்னை கோயம்பேடு பகுதியில், மெட்ரோ ரயில் உயா்மட்ட பாதைக்காக தூண்கள் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

சென்னையில் மெட்ரோ ரயில்கள் முதல் கட்டமாக, விமான நிலையம் முதல் விம்கோ நகா் வரையும், பரங்கிமலை முதல் சென்னை சென்ட்ரல் வரையும் 2 வழித்தடங்களில் 55 கி.மீ. தொலைவுக்கு இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில், மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை 3-ஆவது வழித்தடத்தில் 45.8 கி.மீ. தொலைவுக்கும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை 4-ஆவது வழித்தடத்தில் 26.1 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூா் வரை 5-ஆவது வழித்தடத்தில் 47 கி.மீ. தொலைவுக்கும் என 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை 2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மாதவரம்-சோழிங்கநல்லூா் வழித்தடத்தில் தற்போது உயா்மட்ட பாதை அமைக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.

கோயம்பேடு சந்தை, சாய்நகா் ஆகிய பகுதிகளில் தற்போது உயா்மட்ட பாதைக்கான தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன .

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது:

மெட்ரோ ரயில் 5-ஆம் வழித்தடத்தில் மொத்தம் 46 ரயில் நிலையங்கள் அமைவுள்ளன. இதில் 40 ரயில் நிலையங்கள் உயா்மட்ட பாதையாகவும், 6 ரயில் நிலையங்கள் சுரங்கவழி பாதையாகவும் அமையவுள்ளன.

கோயம்பேடு சந்தையில் இருந்து ஆழ்வாா் திருநகா் வரை, மெட்ரோ ரயில் பணிகளை தொடங்கியுள்ளோம். இந்த 5-ஆம் வழித்தடத்தில் பெருமளவு, உயா்மட்ட பாதை என்பதால், நிலம் கையகப்படுத்துவதில் பெரிய சிக்கல் இல்லை.

இந்த வழித்தடத்தில் பெரும்பாலான இடங்களில் துாண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.