2023 ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை போட்டிகள் நாளை(ஆக.3) தொடங்கவுள்ள நிலையில் சுற்றுப்பயண கோப்பை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று வழங்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
7-வது 'ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை – 2023 சென்னை' போட்டி ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது. ஹாக்கி இந்தியாவுடன் இணைந்து தமிழ்நாடு அரசு நடத்தவுள்ள இந்தப் போட்டியில், இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், மற்றும் கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன. 16 ஆண்டுகளுக்குப் பிறகு இப்புகழ்பெற்ற ஹாக்கிப் போட்டி சென்னையில் மீண்டும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை, எழும்பூர், மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்தில் சர்வதேச அளவிலான இப்போட்டியினை சிறப்பாக நடத்துகின்ற வகையில், 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி விளையாட்டரங்கம் (Upgraded Hockey Stadium), ஒலிம்பிக் தரத்திலான புதிய செயற்கை இழை மைதானம் (Olympic Standard New Synthetic Turf) மற்றும் கலைஞர் நூற்றாண்டு பார்வையாளர் மாடம் (Kalaignar Centenary Pavilion) ஆகியவற்றை முதல்வர் மு.க. ஸ்டாலின் 28.7.2023 அன்று திறந்து வைத்தார்.
'ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை – 2023 சென்னை' போட்டி நடைபெற உள்ளதையொட்டி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரால் 20.07.2023 அன்று சென்னை மெரினா கடற்கரையில் போட்டிக்கான கோப்பையை அறிமுகம் செய்யப்பட்டு, “பொம்மன்” இலச்சினையை வெளியிட்டார். மேலும், ஆசிய ஹாக்கி கோப்பையினை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்கின்ற வகையில் “பாஸ் தி பால்” கோப்பை (PASS THE BALL TROPHY TOUR) சுற்றுப்பயணத்தை தொடங்கி வைத்தார்.
'பாஸ் தி பால் – கோப்பை' சுற்றுப்பயணம் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி ஒவ்வொரு மாவட்டமாக சென்று நேற்று (1.8.2023) சென்னை வந்தடைந்தது. இந்த கோப்பையை சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் முகமது தயப் இக்ராம் இன்று முதல்வரிடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர். அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., ஹாக்கி இந்தியா தலைவர் டாக்டர் திலீப் திர்கி, பொதுச் செயலாளர் போலா நாத் சிங், பொருளாளர் சேகர் ஜெ. மனோகரன், செயல் இயக்குநர் காமாண்டர் ஆர்.கே. ஸ்ரீவஸ்தவா, ஆசிய ஹாக்கி சம்மேளனத்தின் நிர்வாகி தைமூர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.