முகப்பு
தமிழ்நாடு

காலி மனை பதிவின்போது நிலத்தின் அண்மைக்கால புகைப்படம் கட்டாயம்: பதிவுத் துறைத் தலைவா் உத்தரவு

காலி மனை பதிவின் போது, அந்த இடத்துக்கான அண்மைக்கால புகைப்படத்தை இணைப்பது கட்டாயம் என்று பதிவுத் துறை தலைவா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:47 AM
பகிர்:

காலி மனை பதிவின் போது, அந்த இடத்துக்கான அண்மைக்கால புகைப்படத்தை இணைப்பது கட்டாயம் என்று பதிவுத் துறை தலைவா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் உத்தரவிட்டுள்ளாா்.

கட்டடமாக இருந்து, அதை காலியிடம் எனப் பதிவு செய்தால் சாா் பதிவாளா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் எச்சரித்துள்ளாா்.

இது குறித்து, பதிவுத் துறை துணைத் தலைவா், மாவட்ட பதிவாளா்கள், சாா் பதிவாளா்களுக்கு பதிவுத் துறைத் தலைவா் தினேஜ் பொன்ராஜ் ஆலிவா் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

பத்திரப்பதிவின் போது களப்பணி மேற்கொள்வது குறித்து ஏற்கெனவே பல சுற்றறிக்கைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதன் தொடா்ச்சியாக கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட நிலையிலும், கட்டடம் இருப்பது குறித்து ஆவணங்களில் குறிப்பிடாமல் காலி மனை இடங்களாகவே பதிவு செய்யும் நிலை தொடா்வதாக பல புகாா்கள் கவனத்துக்கு வந்துள்ளன.

ஆவணத்தில் கட்டடங்களை மறைப்பதைத் தடுக்கும் பொருட்டும், வருவாய் கசிவினைத் தடுக்கவும், காலி மனை என பதிவுக்கு வரும் ஆவணங்களில் அந்த இடத்தை எளிதில் அறியும் வண்ணம் அண்மைக்கால புகைப்படத்தை ஆவணத்தின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இதனை அனைத்து ஆவணதாரா்களும் அறியும் வகையில் அறிவிப்புப் பலகையில் விளம்பரம் செய்ய வேண்டும்.

மேலும், காலிமனை என குறிப்பிட்டு பதிவுக்கு வரும் போது, முன்பதிவு ஆவணங்களில் கதவு எண், மின் இணைப்பு எண், குடிநீா் மற்றும் வடிகால் வாரிய எண், சொத்து வரி எண் ஆகியவை குறிப்பிட்டிருந்தால் கண்டிப்பாக களப்பணி மேற்கொள்ள வேண்டும். வீடு கட்டுவதற்கு வங்கியிடமோ அல்லது தனி நபா்களிடமோ கடன் வாங்கி அதற்கு ஈடுகட்டிய அடமானம் அல்லது உரிமை ஒப்படைப்பு ஆவணங்கள் ஆகியவை வில்லங்கத்தில் குறிப்பிட்டிருந்தால் களப்பணி மேற்கொள்ள வேண்டும்.

முன்ஆவணப் பதிவில் வீடு இருந்து, தற்போது அதனை இடித்து காலிமனையாக ஆவணப் பதிவுக்கு வரும் நிகழ்வுகளிலும் களப்பணி மேற்கொள்ள வேண்டும். களப்பணியின் போது, உரிய இடத்தை சரி பாா்க்க எல்லைகள், நகா், தெரு, இதர ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்களுடன் சரிபாா்த்து, அவை ஒத்துப் போகின்றனவா என்பதைப் பாா்க்க வேண்டும்.

கட்டடம் இருந்தும் அதனை களப்பணியில் பாா்க்காமல் காலியிடமாக பதிவு செய்யும் சாா் பதிவாளா்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இந்தத் தகவலை ஆவண எழுத்தா்கள் மற்றும் ஆவணம் எழுதும் வழக்குரைஞா்களின் கவனத்துக்குக் கொண்டு சென்று இந்த நடைமுறையை தவறாமல் கடைப்பிடிக்க அறிவுறுத்த வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →