காவிரியில் தமிழகத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் தில்லியில் ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், கேரளத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது காவிரியில் இருந்து 38 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும் என தமிழ்நாடு அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால், தண்ணீர் திறக்க இயலாது என அம்மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கர்நாடகம் தண்ணீர் விட மறுத்ததால் காவிரி ஆணைய கூட்டத்திலிருந்து தமிழகம் பாதியில் வெளியேறியது.
இந்த நிலையில் காவிரியில் தமிழகத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், மேக்கேதாட்டுவில் அணை கட்டும் கா்நாடக அரசின் முடிவு உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு எதிரானது என்றும் மத்திய அரசு இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
மேலும் தமிழகத்திற்குத் தேவையான காவிரி நீரை திறந்துவிட கர்நாடக அரசு மறுப்பதாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.