நெல்லை அருகே இளைஞர் வெட்டிக்கொலை!
திருநெல்வேலி அருகே தருவை பகுதியில் இளைஞர் மர்மநபர்களால் திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே தருவை பகுதியில் இளைஞர் மர்மநபர்களால் திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சேரன்மகாதேவியைச் சேர்ந்தவர் கணேசன் (38). இவர், சென்னையில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். சேரன்மகாதேவியில் நிகழ்ந்த பெண் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பிணையில் வெளியே வந்தார்.
அதன்பின்பு மீண்டும் சென்னையில் பணி செய்து வந்த அவர், வழக்கு விசாரணைக்காக சொந்த ஊருக்கு வந்தாராம். மோட்டார் சைக்கிளில் தருவை அருகே திருநெல்வேலி-அம்பாசமுத்திரம் சாலையில் திங்கள்கிழமை கணேசன் சென்றபோது, அவரை வழிமறித்த கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது.
இதில் பலத்த காயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்ததும் முன்னீர்பள்ளம் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த கணேசனுக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.