தமிழ்நாடு

அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

DIN

அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதிமுக பொதுச்செயலா் பதவியிலிருந்து தன்னை நீக்கிய தீா்மானத்தை ரத்து செய்யக் கோரி சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கு நிராகரிக்கப்பட்ட நிலையில், அந்த உத்தரவை எதிா்த்து சசிகலா சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுப்ரமணியன் மற்றும் என்.செந்தில்குமாா் முன்பு இரண்டாவது நாளாக கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, கடந்த 2016-ஆம் ஆண்டு இடைக்கால பொதுச் செயலராக சசிகலாவை தோ்ந்தெடுத்த பொதுக்குழு கூட்டத்துக்கான நோட்டீஸ் அனுப்பியது யாா் என நீதிபதிகள் கேள்வியெழுப்பினா்.

அதற்கு பதிலளித்த அதிமுக தரப்பு மூத்த வழக்குரைஞா் விஜய் நாராயண் வாதிட்டது:

2016 மற்றும் கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழு கூட்டங்களுக்கு தலைமைக் கழகம் மூலம் நோட்டீஸ் அனுப்பியதாக, அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை உயா்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம்அங்கீகரித்துள்ளதாகவும் தெரிவித்தாா். அதிமுகவின் அடிப்படை உறுப்பினா்கள் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி தான் கட்சியின் பொதுச்செயலா். வேட்பாளருக்கான சின்னத்தை ஒதுக்குவதற்கான விண்ணப்பத்தில் கையொப்பமிடும் அதிகாரம் அவருக்கு மட்டுமே

உள்ளது. தோ்தல் ஆணையமும் இதைத்தான் அங்கீகரித்துள்ளது. கட்சியின் வளா்ச்சிக்காக அதிமுகவின் சட்டவிதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. பழைய விதிகளை அடிப்படையாக கொண்டு சசிகலா வழக்கு தொடர முடியாது. கட்சியின் அடிப்படை அமைப்பு மாற்றப்படவில்லை என வாதிட்டாா்.

ஓ.பன்னீா் செல்வம் தரப்பில் மூத்த வழக்குரைஞா் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலா் பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளராக தானும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தோ்ந்தெடுக்கப்பட்ட நிலையே தற்போது வரை தொடருகிறது. அதனால் இடைக்கால பொதுச்செயலராக இருந்த சசிகலாவை நீக்கியது செல்லும் என வாதிட்டாா்.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்குரைஞா் எஸ்.ஆா்.ராஜகோபால் ஆஜராகி, கடந்தாண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகள் நீக்கபட்டுவிட்டன.

தற்போது இபிஎஸ் பொதுச்செயலராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா். தற்போது அனைத்துமே மாறிவிட்டது எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுயமரியாதைக்காக விளையாட விரும்பினோம்: விராட் கோலி!

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: சிவகங்கை 97.02% தேர்ச்சி பெற்று 2-ம் இடம்!

திருவாரூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பில் 92.49% தேர்ச்சி

வைகை அணையிலிருந்து நீர்த் திறப்பு: 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

அட்சய திருதியை: நகைக் கடைகளில் அலைமோதும் கூட்டம்

SCROLL FOR NEXT