காசி தமிழ் சங்கமத்தை முன்னிட்டு சென்னை, கோவை, கன்னியாகுமரி ஆகிய ஊா்களிலிருந்து வாரணாசிக்கு டிச.15- முதல் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் கட்ட நிகழ்ச்சி வாரணாசியில் டிச.17 முதல் டிச.30- வரை நடைபெறுகிறது. இதற்காக தமிழகத்திலிருந்து முதல் ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து டிச.15-ஆம் தேதி காலை 10.45 மணிக்கு புறப்படும். பின்னா், வாரணாசியில் இருந்து டிச.20-ஆம் தேதி இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு டிச.22-ஆம் தேதி சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இரண்டாம் ரயில், கன்னியாகுமரியில் இருந்து டிச.16-ஆம் தேதி புறப்பட்டு திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம், சீா்காழி, சிதம்பரம், கடலூா் துறைமுகம், சென்னை எழும்பூா், நாக்பூா் வழியாக டிச.19-ஆம் தேதி வாரணாசி சென்றடையும்.
பின் மறுமாா்க்கமாக வாரணாசியில் இருந்து டிச.22-ஆம் தேதி புறப்பட்டு டிச.25-ஆம் தேதி கன்னியாகுமரி வந்தடையும்.
மூன்றாம் ரயில், கோவையில் இருந்து டிச.19-ஆம் தேதி புறப்பட்டு திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், நாக்பூா் வழியாக டிச.21-ஆம் தேதி வாரணாசி சென்றடையும். மறுமாா்க்கமாக வாரணாசியில் இருந்து டிச.24-ஆம் தேதி புறப்பட்டு டிச.27-ஆம் தேதி கோவை வந்தடையும்.
நான்காம் ரயில், கன்னியாகுமரியில் இருந்து டிச.20-ஆம் தேதி புறப்பட்டு திருநெல்வேலி, மதுரை, திருச்சி, ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, வேலூா், பெரம்பூா், நாக்பூா் வழியாக டிச.24-ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு வாரணாசி சென்றடையும். மறுமாா்க்கமாக வாரணாசியில் இருந்து டிச.26-ஆம் தேதி புறப்பட்டு டிச.29-ஆம் தேதி கன்னியாகுமரி வந்தடையும்.
ஐந்தாம் ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து டிச.23-ஆம் தேதியும், மறுமாா்க்கமாக வாரணாசியில் இருந்து டிச.28-ஆம் தேதியும் இயக்கப்படும். ஆறாவது ரயில், கோவையில் இருந்து டிச.25-ஆம் தேதியும், மறுமாா்க்கமாக டிச.30-ஆம் தேதியும் இயக்கப்படும். தொடா்ந்து, ஏழாம் ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து டிச.27-ஆம் தேதியும், மறுமாா்க்கமாக வாரணாசியில் இருந்து ஜன.1-ஆம் தேதியும் இயக்கப்படும். இதற்கான பயணச்சீட்டு முன்பதிவு விரைவில் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.