வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆளுங்கட்சி பிரமுகர்களின் தலையீடின்றி நிவாரணத் தொகையினை முழுமையாக வழங்க வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் வாழ்வாதாரத்தை இழந்த பொதுமக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
புயல் கடந்து சென்றாலும் அதன் தாக்கம் இன்றளவும் குறையவில்லை என்பதற்கு தாம்பரம், முடிச்சூர், வேளச்சேரி, பள்ளிக்கரணை, நசரத்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வடியாமல் இருக்கும் மழைநீரே உதாரணம்.
புயல், வெள்ள பாதிப்பால் இழந்த வாழ்வாதாரத்தை மீட்க அரசு அறிவித்திருக்கும் 6 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை போதுமானதாக இருக்காது என பொதுமக்கள் வைத்துள்ள குற்றச்சாட்டு ஒரு புறமிருக்க நியாய விலைக்கடைகள் மூலமாக விநியோகிக்கப்படும் நிவாரணத் தொகை ஆளுங்கட்சி பிரமுகர்களின் தலையீடு இன்றி முழுமையாக கிடைக்குமா? என்ற கேள்வியும் அச்சமும் அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் படிக்க | மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் நாளை பதவியேற்பு
எனவே, ஆளுங்கட்சி பிரமுகர்களின் தலையீடின்றி அரசு அறிவித்திருக்கும் நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்வதோடு, குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.