பத்திரப்பதிவில் ஒரே நாளில் ரூ.192 கோடி வருவாய்
பத்திரப்பதிவு மூலம் நேற்று ஒரே நாளில் தமிழ்நாடு அரசுக்கு ரூ.192 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
பத்திரப்பதிவு மூலம் நேற்று ஒரே நாளில் தமிழ்நாடு அரசுக்கு ரூ.192 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் முக்கிய சுபமுகூர்த்த நாள்களில் கூடுதல் பத்திரப்பதிவுகள் நடைபெறும் என்பதால் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும். அந்த வகையில் நேற்று(டிச. 14, வியாழக்கிழமை) சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன்மூலம் தமிழ்நாடு அரசுக்கு ரூ.192 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
இதுகுறித்து வணிகவரி (ம) பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பதிவுத்துறையில் சார் பதிவகங்களில் 14.12.2023 அன்று ஆவணங்களின் பதிவு அதிகமாக எதிர்பார்க்கப்பட்டதால் கூடுதலான டோக்கன்கள் வழங்கப்பட்டன. 14.12.2023 அன்று பதிவு செய்யப்பட்ட 22,060 ஆவணங்களின் மூலம் அரசுக்கு வருவாயாக ரூபாய் 192 கோடி வரப்பெற்றுள்ளது.
இந்த நிதியாண்டில் பதிவுத்துறையில் ஒரே நாளில் இது வரை வரப்பெற்ற வருவாயில் நேற்றைய தினம் பெறப்பட்ட வருவாயே மிக அதிகமானதாகும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.