விவசாய நிலங்களைக் கைப்பற்றி திட்டக்குடியில் தொழிற்பேட்டை எடப்பாடி பழனிசாமி கண்டனம்
விவசாய நிலங்களைக் கைப்பற்றி, திட்டக்குடியில் தொழிற்பேட்டை அமைக்க அரசு முயற்சிப்பதாகக் கூறி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
விவசாய நிலங்களைக் கைப்பற்றி, திட்டக்குடியில் தொழிற்பேட்டை அமைக்க அரசு முயற்சிப்பதாகக் கூறி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டத்தில் புல்லூா், தொண்டங்குறிச்சி, ஆவட்டி ஆகிய கிராமங்களில் சுமாா் 500 ஏக்கா் முப்போகம் விளையக்கூடிய நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க திமுக அரசு முயற்சி செய்து வருகிறது. அதற்கு அந்தப் பகுதி விவசாயிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இந்தக் கிராமங்களில், மானாவரி வகைப்பாடாக இருந்த நிலங்களை, விவசாயிகள் நூறடி ஆழத்துக்கு மேல் கிணறுகள் வெட்டி, பாசன வசதி ஏற்படுத்தி, நிலங்களை பண்படுத்தி, முப்போகம் விளையக்கூடிய நிலங்களாக மாற்றி விவசாயம் செய்து வருகின்றனா்.
இந்த நிலங்களில், சுமாா் 50-க்கும் மேற்பட்ட கிணறுகளும், மின் மோட்டாா் இணைப்புகளும் உள்ளன. மிகுந்த பொருள்செலவில் தற்போதுள்ள விவசாய கட்டமைப்புகளை உருவாக்கி, அந்தப் பகுதி மக்கள் நன்றாக விவசாயம் செய்து வருகின்றனா்.
இந்த நிலங்களில், இருந்து மிக குறைந்த தொலைவுகளில் விளம்பாவூா், இறையூா், ஆசனூா் ஆகிய இடங்களில் 3 தொழிற்பேட்டைகள் உள்ளன. ஆனால், அமைச்சா் சி.வி.கணேசன் தொழிற்பேட்டை அமைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறாா். இது கண்டிக்கத்தக்கது. விவசாயிகளின் நிலத்தைக் கையகப்படுத்தி சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணியை அரசு கைவிட வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.