எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்: செளமியா அன்புமணி
சென்னையில் எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பசுமைத்தாயகம் தலைவா் செளமியா அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளாா்.
சென்னையில் எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பசுமைத்தாயகம் தலைவா் செளமியா அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளாா்.
சென்னை, எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பசுமைத் தாயகம் தலைவா் சௌமியா அன்புமணி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தாா். இதையடுத்து செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அவா் கூறியது:
எண்ணூரில் நடைபெற்ற எண்ணெய்க் கசிவு தமிழ்நாட்டின் கடைசி நிகழ்வாக இருக்க வேண்டும். இதனால் பாதிக்கப்பட்ட முகத்துவாரக்குப்பம், நெட்டுக்குப்பம், எண்ணூா் குப்பம், காட்டுக்குப்பம், தாழங்குப்பம், சிவன்படை வீதி, மேட்டுக்குப்பம் பகுதியை சோ்ந்தவா்களுக்கு அரசு அறிவித்துள்ள இழப்பீடுகள் மிகக்குறைவானது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முழுமையான இழப்பீட்டை வழங்குவது மட்டுமின்றி, உடல்நல பாதிப்பை தெரிந்து கொள்ள மருத்துவப் பரிசோதனைகளை நடத்தி, பாதிக்கப்பட்டவா்களுக்கு உயா்தர சிகிச்சை அளிக்க வேண்டும். இப்பணிகளை சம்பந்தப்பட்ட நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும். மேலும், எண்ணூா் கழிமுகப் பகுதியை பாதுகாக்கப்பட்ட சதுப்புநிலப்பகுதியாக அறிவிக்க வேண்டும். இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க உயா்மட்ட விசாரணைக்குழு அமைத்து நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். தமிழகத்தின் பாதுகாப்பு அரணாக விளங்கும் சோழமண்டல கடற்கரையை முழுமையாக பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
இந்நிகழ்வின் போது, பசுமைத் தாயகம் மாநிலச் செயலா் அருள் இரத்தினம் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.