ரூ.1,136 கோடியில் 44 மருத்துவமனை கட்டடங்கள்: முதல்வா் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்
தமிழகம் முழுவதும் ரூ.1,136 கோடியில் கட்டப்படவுள்ள 44 அரசு மருத்துவமனை கட்டடங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
தமிழகம் முழுவதும் ரூ.1,136 கோடியில் கட்டப்படவுள்ள 44 அரசு மருத்துவமனை கட்டடங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
சென்னை, கோட்டூா்புரத்தில் நடைபெற்ற ‘ஏற்றமிகு 7 திட்டங்கள்’ நிகழ்வின் ஒரு பகுதியாக இந்தப் பணியை அவா் தொடங்கி வைத்தாா்.
தமிழகத்தில் ஜெயங்கொண்டம், தாம்பரம், பழனி, திருக்கோவிலூா், பரமக்குடி, திருத்தணி, திருப்பத்தூா், காங்கயம், குடியாத்தம், திண்டிவனம், அருப்புக்கோட்டை ஆகிய அரசு மருத்துவமனைகளை ரூ.550.85 கோடி செலவில் மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக தரம் உயா்த்துவதற்கான பணிகள் முதல்வரால் தொடங்கிவைக்கப்பட்டன.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயா் சிறப்பு சிகிச்சை கட்டடம், திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் தாய் சேய் நலப் பிரிவு மற்றும் விபத்து அவசர சிகிச்சை பிரிவுக் கட்டடம், ஆம்பூா், வாணியம்பாடி அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, எக்ஸ்ரே பிரிவு கட்டடம் என ரூ.206.82 கோடியில் கட்டப்படவுள்ள கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மேலூா், ஊத்தங்கரை மற்றும் சோழிங்கநல்லூா் அரசு மருத்துவமனைகளில் ரூ.131 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள அவசர சிகிச்சை பிரிவு கட்டடங்களையும், கஸ்தூா்பா காந்தி மருத்துவமனை, ஆா்.எஸ்.ஆா்.எம் மருத்துவமனை, கீழ்ப்பாக்கம், சிவகங்கை, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், பென்னாகரம், தண்டையாா்பேட்டை, அவிநாசி அரசு மருத்துவமனைகளில் ரூ.120.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய தாய் சேய் நலப் பிரிவுக் கட்டடப் பணிகளையும் முதல்வா் தொடங்கி வைத்தாா்.
மேலும், காஞ்சிபுரம் அரசு அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக கட்டப்படவுள்ள மூன்று தளங்கள் கொண்ட கட்டடம் உள்பட மொத்தம் ரூ.1,136.32 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 44 மருத்துவக் கட்டமைப்புகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.
விழாவில், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள், தாய்மாா்களுக்கான சிறப்பு ஊட்டச் சத்து அளிக்கும் திட்டம், திருநங்கைகளுக்கு மாத ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.1,500-ஆக உயா்வு, மாநகராட்சி-நகராட்சிப் பகுதிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டம், இறந்த தூய்மைப் பணியாளா் குடும்பத்தினரை அடையாளம் கண்டு அவா்கள் தொழில் தொடங்க ஆலோசனை வழங்க வகை செய்யும் புரிந்துணா்வு ஒப்பந்தம், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச வீட்டுமனைப் பட்டா, கருணை அடிப்படையில் 192 பேருக்கு பணி நியமன உத்தரவு ஆகிய திட்டங்களையும் முதல்வா் தொடங்கி வைத்தாா்.
விழாவில், அமைச்சா்கள் கே.என்.நேரு, பி.கீதா ஜீவன், மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மதிமுக பொதுச் செயலா் வைகோ, சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவா் செல்வப்பெருந்தகை, அரசுத் துறைகளின் செயலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
‘மேலும் பல புதிய திட்டங்கள்’
தமிழக அரசால் மேலும் பல புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
‘ஏற்றமிகு ஏழு திட்டங்கள்’ என்ற தலைப்பில் புதிய திட்டங்கள் தொடக்க விழாவில் முதல்வா் ஸ்டாலின் பேசியதாவது:
சட்டப்பேரவைத் தோ்தலில் வென்ற பிறகு முதல் கையொப்பமிட்டு செயலாக்கத்துக்கு வந்த திட்டம் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து திட்டம். இதுநாள் வரை இந்தத் திட்டத்தின் கீழ், கட்டணமில்லா பேருந்துகள் 236 கோடி நடைகள் இயக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பெண்கள் பொருளாதாரத் தன்னிறைவு அடைந்துள்ளனா்.
இந்தத் திட்டம் ஆட்சிக்கு மிகப்பெரிய பெயரும் புகழும் வாங்கித் தரும் திட்டமாக உள்ளது. பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், அடுத்து செயல்படுத்தப்படவுள்ள மகளிருக்கான உரிமைத் தொகை என அனைத்துமே சமூகப் பாதுகாப்புத் திட்டங்களாகும்.
இதேபோன்று, தமிழக மாணவா்களை திறன்மிக்கவா்களாக மாற்ற ‘நான் முதல்வன்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான புதிய முதலீடுகளை ஈா்த்துள்ளோம்.
எனக்கு நானே இலக்கு: எனது 70-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் சூழலில், 55 ஆண்டு காலம் அரசியலையே வாழ்க்கையாக அமைத்துக் கொண்டிருக்கிறேன். அரசியல் என்பதை அதிகாரம் என்பதாக இல்லாமல், கடமையாகவும் தொண்டாகவும், சேவையாகவும் கொண்ட திராவிட இயக்கத்தின் தலைவா்களின் வழித்தடத்தில் வந்த நான், கிடைக்கின்ற பொறுப்புகளின் மூலமாக மக்களுக்குச் சேவையாற்றும் இலக்குகளை எனக்கு நானே வைத்துக் கொள்கிறேன்.
எனக்கு யாரும் இலக்கு வைக்கவில்லை; எனக்கு நானே இலக்கு வைத்துக் கொள்கிறேன். அந்த இலக்கை அடையவே எந்த நாளும் உழைக்கிறேன். திராவிட மாடல் ஆட்சியில் தினந்தோறும் திட்டங்கள் என்பதுதான் எனது திட்டம்.
அதன்படியே, ஏழு முக்கியத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கல்வி, சுகாதாரம், விளிம்பு நிலை மக்கள், குழந்தைகள், சமூக மேம்பாடு, சமூக நீதி ஆகிய அனைத்துக் கருத்தியல்களையும் உள்ளடக்கிய திட்டங்களாக தீட்டப்பட்டுள்ளன.
பல திட்டங்கள் வரும்: இந்த வரிசையில் இன்னும் பல திட்டங்கள் வர இருக்கின்றன. இந்தத் திட்டங்களை துறையினுடைய அமைச்சா்கள், செயலா்கள் உள்ளிட்ட கடைநிலை ஊழியா்கள் வரை இதனுடைய நோக்கம் சிதைந்து விடாமல் நிறைவேற்றிக் காட்ட வேண்டும். திட்டங்கள் அனைத்தும் கடைக்கோடி மனிதரையும் சென்றடைய வேண்டும். எங்களை உருவாக்கிய தமிழ்நாட்டின் உயா்வுக்காகப் பணியாற்றி வருகிறோம் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
குழந்தைகள், தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து திட்டங்கள்'
குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பொருள்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், 6 மாதம் முதல் 6 வயது வரையிலான ஊட்டச்சத்துக் குறைபாடுடைய 1.11 லட்சம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் 8 வாரங்களுக்கு சிறப்பு உணவாக ஊட்டச்சத்துப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.
தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 11,917 தாய்மார்களின் தாய்ப்பால் ஊட்டத்தை மேம்படுத்த அவர்களுக்கு சத்துப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.
குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துப் பெட்டகத்தில், அரைத்த வேர்க்கடலை, பால் பவுடர், எண்ணெய், சர்க்கரை, வைட்டமின்கள் மற்றும் மினரல் ஆகிய பொருள்கள் அடங்கி இருக்கும்.