கனத்த இதயத்துடன் பாஜகவிலிருந்து விலகுவது என்று நான் முடிவு செய்துள்ளேன் என பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளா்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம், பாஜகவிலிருந்து காயத்ரி ரகுராமை 6 மாதங்களுக்கு நீக்கம் செய்து தமிழகத் தலைவா் கே.அண்ணாமலை அறிவித்திருந்த நிலையில், அவர் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கட்சியிலிருந்து வெளியேறுவது தொடர்பாக காயத்ரி ரகுராம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், கனத்த இதயத்துடன் பாஜகவிலிருந்து விலகுவது என்று நான் முடிவு செய்துள்ளேன். அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. உண்மையான தொண்டர்களுக்கு பாஜகவில் மதிப்பு இல்லை. அண்ணாமலைக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
அண்ணாமலை மலிவான, பொய் பேசும், அதர்மத்தின் பக்கம் நிற்கும் தலைவர். நான் பாஜகவில் இருந்து விலகுவதற்கு அவர்தான் காரணம். என்னால் அவரது தலைமையின் கீழ் செயல்பட முடியாது.
பெண்களே, உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள். மரியாதை இல்லாத இடத்தில் பெண்கள் தொடர்ந்து இருக்கக் கூடாது. என்னிடம் உள்ள ஆடியோ, விடியோக்களை போலீசிடம் வழங்கி, அண்ணாமலையை விசாரிக்க வேண்டும் என புகாரளிக்கவுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் காயத்ரி ரகுராமை காட்சியிலிருந்து நீக்கி அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பில், பாஜக கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடா்ச்சியாக ஈடுபட்டு வந்ததால், காயத்ரி ரகுராம் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் 6 மாத காலத்துக்கு நீக்கப்படுகிறாா் என்று கூறியிருந்தார்.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம் புறக்கணிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதைத் தொடா்ந்து, அவா் கே.அண்ணாமலையை மறைமுகமாக விமா்சித்து வந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாஜகவிலிருந்து நீக்கப்பட்டபோது காயத்ரி ரகுராம் கூறியிருந்ததாவது, பாஜகவுக்காக 8 ஆண்டுகளாக உழைத்தேன். இந்த நடவடிக்கை ஏற்புடையதல்ல. எனக்கு எதிரானவா்களின் சித்திரிப்பை ஏற்க முடியாது. மேலிடத் தலைமையிடம் என் விளக்கத்தை தெரிவித்தேன். பாஜகவில் மீண்டும் இணைந்து பணியாற்றுவேன் என்று கூறியிருந்த நிலையில், இரண்டு மாத காலத்துக்குள் கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.