முகப்பு
தமிழ்நாடு

ஆசிரியர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்கவில்லை: ஓபிஎஸ் கண்டனம்

ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு கடந்த மூன்று மாத காலமாக ஊதியம் வழங்காதது கடும் கண்டத்திற்குரியது என ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:39 PM
ஓ.பன்னீா்செல்வம்
பகிர்:

ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு கடந்த மூன்று மாத காலமாக ஊதியம் வழங்காதது கடும் கண்டத்திற்குரியது என ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மூன்று மாதங்களாக சம்பளம் பெறாமல் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கோரிக்கைகளைத்தான் நிறைவேற்ற முடியவில்லை, அகவிலைப்படி உயர்வை உரிய நேரத்தில் தர முடியவில்லை என்றால், சம்பளத்தைகூட உரிய நேரத்தில் தர முடியாத கையாலாகாத அரசாக திமுக அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. இதுதான் 'திராவிட மாடல்' ஆட்சியின் லட்சணம்.

பொதுவாக, நிர்வாக ரீதியான மாற்றங்களை மேற்கொள்ளும்போது, ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஊதியம் உரிய தருணத்தில் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாமல் அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டதன் காரணமாக, ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு மூன்று மாதங்களாக சம்பளம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. இது ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மத்தியில் பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. ஊதியத்திற்காக இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டுமோ, வாங்கிய- கடனுக்கான வட்டி அதிகரித்துக் கொண்டே போகிறதே என்ற அச்சம் பாதிக்கப்பட்டோர் மத்தியில் நிலவுகிறது. 

எனவே, மூன்று மாதமாக சம்பளம் வழங்கப்படாத அனைத்து ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் உடனடியாக சம்பளம் வழங்கவும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற நிலைமை ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்!' என்று குறிப்பிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →