வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலரை அடித்து உதைத்த திமுக நிர்வாகிகள் மீது போலீசார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்த சிலுக்குவார்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் மனைவி முத்துராமலட்சுமி (31). விக்னேஷ் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். முத்துராமலட்சுமி தனது மாமனார் முத்து (70) மற்றும் மகன், மகளுடன் தற்போது வெள்ளக்கோவிலில் தங்கியிருந்து, வெள்ளக்கோவில் வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலராகப் பணிபுரிந்து வருகிறார்.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் குழந்தைகள் குறைவாக உள்ள அங்கன்வாடி மையங்களைக் கணக்கிட்டு அருகிலுள்ள மையத்துடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து புள்ளசெல்லிபாளையம் அங்கன்வாடி மையத்தை அருகிலுள்ள மற்றொரு மையத்துடன் இணைக்க முத்துராமலட்சுமி பரிந்துரை செய்துள்ளார். இதற்கு திமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். உடனடியாக நகராட்சி அலுவலகம் வந்து தன்னைப் பார்க்குமாறு, திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக இருக்கும் ராசி கே. ஆர். முத்துக்குமார் கூறியுள்ளார். இவருடைய மனைவி கனியரசி வெள்ளக்கோவில் நகர் மன்றத் தலைவராக இருந்து வருகிறார். முத்துராமலட்சுமி வரவில்லை.
இந்நிலையில் வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்துக்கு வந்த முத்துக்குமார் மற்றும் திமுக நகர துணைச் செயலாளர் அருள்மணி. புள்ளசெல்லிபாளையத்தைச் சேர்ந்த விசைத்தறி உரிமையாளர் சுப்பிரமணி (40), கரட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் புகழேந்தி (41) உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் முத்துராமலட்சுமியைத் தாக்கியதாகத் தெரிகிறது.
அப்போது அங்கிருந்த முத்துராமலட்சுமியின் மாமனார் முத்துவுக்கும் அடி உதை விழுந்துள்ளது. இருவரும் காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். திமுக திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் முத்துக்குமார் மீது வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல திமுகவைச் சேர்ந்த சுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரிலும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் முத்துராமலட்சுமி மற்றும் அவருடைய மாமனார் முத்து மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.