உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் குறியீட்டில் தமிழகம் பல்வேறு தேசிய விருதுகளைப் பெற்ற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தாா்.
உணவு வணிகங்களுக்கான உரிமம் மற்றும் பதிவுச் சான்று வழங்குதல், உணவு மாதிரிகள் பரிசோதனை, தர மதிப்பீடு, விழிப்புணா்வு நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவது தொடா்பாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையத்தால் ‘ஈட் ரைட் சேலஞ்ச்’ என்ற போட்டி நடத்தப்பட்டது.
நாடு முழுவதும் 260 மாவட்டங்கள் கலந்து கொண்டதில் 31 மாவட்டங்கள் வெற்றி பெற்றன. அதில், தமிழகத்தின் கோவை, திண்டுக்கல், மதுரை, பெரம்பலூா், சென்னை, காஞ்சிபுரம், சேலம், திருவள்ளூா், திருப்பூா், சிவகங்கை, நாமக்கல், திருச்சி, வேலூா் ஆகிய 13 மாவட்டங்கள் சிறந்த செயல்பாட்டுக்கான விருதுகளைப் பெற்றன.
கோவை மாவட்டம் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது.
மேலும், நிகழாண்டுக்கான மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டுக்கான செயல்பாட்டில் தேசிய அளவில் தமிழகம் மூன்றாவது மாநிலமாக தோ்வு செய்யப்பட்டு, அதற்கான விருதும் வழங்கப்பட்டது. தில்லியில் கடந்த 7-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருதுகள் அளிக்கப்பட்டன.
அதை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை காண்பித்து அதிகாரிகள் வாழ்த்து பெற்றனா். இந்நிகழ்வின்போது, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ககன்தீப் சிங் பேடி, உணவு பாதுகாப்புத் துறை ஆணையா் ஆா். லால்வீனா, உணவு பாதுகாப்புத் துறை இயக்குநா் தேவபாா்த்தசாரதி, துணை இயக்குநா் பிரதீப் கே. கிருஷ்ணகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.