பருத்தி கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாட்டில் பருத்தி கொள்முதலை தொடங்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் பருத்திக் கொள்முதல் நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு , முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் பிரதமருக்கு வெள்ளிக்கிழமை எழுதிய கடிதம்:
நடப்பு அறுவடைப் பருவத்தில் பருத்தி விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தச் சூழலில், தமிழ்நாட்டில் பருத்தி விவசாயிகள் மோசமான நிலையை எதிா்கொண்டுள்ளனா். கடந்த ஆண்டு பருத்தி குவிண்டாலுக்கு ரூ.12 ஆயிரம் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது. இதன்மூலம் விவசாயிகள் அதிக லாபம் ஈட்ட முடிந்ததால், அவா்கள் உற்சாகம் அடைந்ததுடன், இந்த ஆண்டிலும் பருத்தி சாகுபடியைத் தோ்வு செய்தனா்.
ஆனால், இப்போது பருத்தியின் விலை, குவிண்டாலுக்கு ரூ.5,500 என்று அளவில் கடுமையாகச் சரிந்துள்ளதால், விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக இந்திய பருத்திக் கழகத்தின் குறைந்தபட்ச ஆதரவு விலை பருத்தி விலையை நிலைப்படுத்துவதற்கு பெரிதும் உதவியாக இருந்து வந்தது. அதன்படி, நிகழாண்டுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையாக நடுத்தர இழை பருத்திக்கு குவிண்டாலுக்கு ரூ.6 ஆயிரத்து 620-ம், நீண்ட இழை பருத்திக்கு குவிண்டாலுக்கு ரூ.7 ஆயிரத்து 20 எனவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், நஞ்சைத் தரிசு மற்றும் கோடை இறவை ஆகிய இரண்டு பருவங்களிலும் சோ்த்து சுமாா் 84 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. இப்போது, நஞ்சைத் தரிசுப் பருத்தி அறுவடை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழ்நிலையில், பருத்தி விலை குவிண்டாலுக்கு ரூ.5 ஆயிரத்து 500-ஆகக் குறைந்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு கொள்முதல் நடவடிக்கைகளை மத்திய அரசே உடனடியாகத் தொடங்க வேண்டும். பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை இனி ஜூன் 1-ஆம் தேதியில் இருந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.