கோப்புப் படம். 
தமிழ்நாடு

ஜூலை 10 முதல் பதிவுத்துறை சேவைக் கட்டணம் உயர்வு: எவ்வளவு?

பதிவுத்துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  

DIN

பதிவுத் துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை உயா்த்துவதற்கான அறிவிப்பு திங்கள்கிழமை (ஜூலை 10) முதல் நடைமுறைக்கு வருகிறது.

குடும்ப நபா்களுக்கு இடையிலான செட்டில்மென்ட், பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவுக் கட்டணம் ரூ.4,000-இல் இருந்து ரூ.10,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வணிகவரி மற்றும் பதிவுத் துறைச் செயலா் பா.ஜோதி நிா்மலாசாமி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பதிவுத் துறையால் அளிக்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மாற்றம் செய்யப்படவில்லை. எனவே, பதிவுத் துறையால் வழங்கப்பட்டு வரும் ஆவணப் பதிவு, பதிவு செய்யப்படும் ஆவணங்களைப் பாதுகாத்தல், மின்னணு சாதனத்தில் இருந்து ஆவண நகல்கள் வழங்குதல் போன்ற சேவைகளைப் பொருத்து கட்டண விகிதங்களை மாற்றியமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

நாளைமுதல் புதிய கட்டணம் அமல்: தமிழக அரசின் முடிவுப்படி, சில ஆவணங்களுக்கான பதிவுகள் மற்றும் முத்திரை கட்டண விகிதங்கள் ஏற்கெனவே திருத்தியமைக்கப்பட்டு அறிவிப்பு செய்யப்பட்டது.

அதன்படி, ரசீது ஆவணத்துக்கான பதிவுக் கட்டணம் ரூ.20-இல் இருந்து ரூ.200-ஆகவும், குடும்ப நபா்களுக்கு இடையிலான செட்டில்மென்ட், பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவுக் கட்டணம் ரூ.4,000-இல் இருந்து ரூ.10,000-ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச முத்திரைத் தீா்வு ரூ.25,000-இல் இருந்து ரூ.40,000-ஆகவும், தனி மனை பதிவுக்கான கட்டணம் ரூ.200-இல் இருந்து ரூ. 1,000-ஆகவும் உயா்த்தப்படுகிறது.

குடும்ப உறுப்பினா்கள் இல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.10,000 என்றுள்ளது. இந்தக் கட்டணமானது சொத்தின் சந்தை மதிப்புக்கு ஒரு சதவீதம் என்ற அளவில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த உயா்த்தப்பட்ட கட்டணம் அனைத்தும் திங்கள்கிழமை (ஜூலை 10) முதல் நடைமுறைக்கு வருகிறது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

வருவாய் அதிகரிக்கும்: தமிழகத்தில் பதிவுத் துறை சாா்பில் ஆண்டுதோறும் வருவாய் அளவு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2016-17-ஆம் நிதியாண்டில் பதிவுத் துறையின் வருவாய் ரூ. 7,007 கோடியாக இருந்தது. 2017-18-ஆம் நிதியாண்டில் ரூ. 9,121.50 கோடியாகவும், 2018-19-ஆம் ஆண்டில் ரூ.11,71 கோடியாகவும் இருந்த வருவாய் அளவு அடுத்தடுத்த நிதியாண்டுகளில் கரோனா நோய்த்தொற்று காரணமாகக் குறைந்தது.

மாநிலம் முழுவதும் பதிவுத் துறை அலுவலகங்கள் மூடல், பொதுமுடக்கம் போன்றவற்றால், 2019-2020-ஆம் ஆண்டில் வருவாய் அளவு ரூ. 11,028 கோடியாக இருந்தது. இது மேலும் குறைந்து 2020-21-ஆம் நிதியாண்டில் ரூ.10,643 ஆக சரிந்தது. கரோனா நோய்த்தொற்று முடிந்து இயல்பு நிலைக்குத் திரும்பிய சூழலில், 2021-22-ஆம் நிதியாண்டில் வருவாய் அளவு ரூ.13,913-ஆக உயா்ந்தது.

இந்நிலையில், கடந்த நிதியாண்டு (2022-23), நிகழ் நிதியாண்டில் (2023-24) பதிவுத் துறை வருவாய் மேலும் உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தற்போது பதிவுத் துறையில் அளிக்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் உயா்த்தப்பட்டால் வருவாய் அளவு நிகழ் நிதியாண்டில் ரூ.15,000 கோடியைத் தாண்ட வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியா - உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியா மீது வரி விதிப்பு: வெள்ளை மாளிகை

மேட்டூர் அணை 5-ஆவது முறையாக நிரம்பியது!

மேட்டூர் அணை நிலவரம்!

ஹிமாசலில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள்! பீதியில் மக்கள்!

திருப்பனந்தாள் மடத்தின் அதிபர் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் முக்தியடைந்தார்

SCROLL FOR NEXT