முகப்பு
தமிழ்நாடு

பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி கொலை: குண்டர் சட்டம் ரத்து

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தல் ஓடும் ரயில் முன்பு மாணவியை தள்ளிக் கொலை செய்த வழக்கில், குற்றவாளி மீது தொடரப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:02 PM
பகிர்:

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தல் ஓடும் ரயில் முன்பு மாணவியை தள்ளிக் கொலை செய்த வழக்கில், குற்றவாளி மீது தொடரப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

குற்றச் சம்பவம் குறித்து பதிவு செய்யப்பட்ட தமிழ் மற்றும் ஆங்கிலப் பதிவுகளில் தகவல்கள் வேறு வேறாக இருந்ததால், குற்றவாளிக்கு எதிரான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், சென்னையை அடுத்த பரங்கிமலை ரயில்நிலையத்தில், மாணவி சத்யாவை, ஓடும் ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில், சதீஷ் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று அவர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை அருகே உள்ள ஆதம்பாக்கம் ராஜா தெரு காவலா் குடியிருப்பு பகுதியை சோ்ந்தவா் மாணிக்கம் (47). இவரது மனைவி வரலட்சுமி (43). இவா், ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறாா். இத் தம்பதியின் மகள் சத்தியா (20). இவா் தியாகராயநகரில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பிகாம் இரண்டாமாண்டு படித்து வந்தாா்.

அதே பகுதியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் தயாளன் மகன் சதீஷ் (23), சத்தியாவை ஒரு தலையாக காதலித்து வந்தாராம். சதீஷ், சத்யாவிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியும் தொந்தரவும் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் சத்தியா அதை ஏற்றுக் கொள்ளவில்லையாம். அண்மையில் சதீஷ், சத்யாவை தாக்கவும் செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்றுள்ளது. இதில் இரு தரப்பினரையும் போலீஸாா் சமாதானம் செய்து அனுப்பியதாகத் தெரிகிறது.

ரயிலில் தள்ளிவிட்டு கொலை

இந்நிலையில் சத்யா, வழக்கம்போல கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு வந்தாா். அப்போது அங்கு நின்றுக் கொண்டிருந்த சதீஷ், சத்தியாவை வழிமறித்து தகராறு செய்துள்ளாா்.

அப்போது தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த மின்சார ரயில் முன் சதீஷ் திடீரென சத்தியாவை தள்ளிவிட்டாா். இதில் ரயிலில் சிக்கி சத்யா, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதைப் பாா்த்த பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா்.

உடனே அவா்கள், சதீஷை பிடிக்க முயற்சித்தனா். ஆனால் அதற்குள் சதீஷ் அங்கிருந்து தப்பியோடினாா். இது குறித்து தகவலறிந்த ரயில்வே போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சத்தியா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

7 தனிப்படைகள் அமைப்பு

இச் சம்பவம் குறித்து தகவலறிந்த ரயில்வே காவல்துறை ஏடிஜிபி வனிதா உள்ளிட்ட உயா் அதிகாரிகள், அங்கு விரைந்து வந்து விசாரணை செய்தனா். இது குறித்து பரங்கிமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தப்பியோடிய சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனா். அதேவேளையில் சம்பவத்தை நேரில் பாா்த்த கல்லூரி மாணவா்கள்,பயணிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், தப்பியோடி தலைமறைவாக இருந்த சதீஷை காவல்துறையினர் கைது செய்து, அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது.
 

முழு கட்டுரையைப் படிக்க →