முகப்பு
தமிழ்நாடு

அரசுப் பள்ளியில் சித்தாள் வேலை பார்க்கும் பள்ளி மாணவர்கள்

அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டட வேலை பார்க்கும் அவலம் தொடர்பான விடியோ சமூக வலை தளங்களில் வெளியானதால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:18 PM
கட்டட வேலை செய்யும் அரசுப்பள்ளி மாணவர்கள்
பகிர்:

பட்டுக்கோட்டை: அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டட வேலை பார்க்கும் அவலம் தொடர்பான விடியோ சமூக வலை தளங்களில் வெளியானதால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம்,  பட்டுக்கோட்டை அருகில் ஆலடிக்குமுளை ஊராட்சியில் அரசினர் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை  மாணவர்கள் 47 பேரும் மாணவிகள் 37 பேரும் ஆக மொத்தம்  84 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் 7 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இப்பள்ளியின்  தலைமை ஆசிரியராக சரவணன் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இப்பள்ளியில் 5 வகுப்புகளுக்கும் சேர்த்து மூன்று வகுப்பறை கட்டடம் மட்டுமே இருப்பதால் தற்போது இரண்டு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் ரூ.20 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிதி முழுவதையும் தலைமை ஆசிரியரே எடுத்து இந்த கட்டட பணிகளை மேற்கொண்டு வருகிறார். 

பணத்தை மிச்சப்படுத்தி ஆதாயம் அடையும் நோக்கத்தோடு  கட்டட பணிகளுக்கு  பள்ளி மாணவர்களை பயன்படுத்திய அவலநிலை தெரியவந்துள்ளது. மாணவர்கள் பாறை எடுத்து குழி தோண்டுவது, செங்கல் உடைப்பது, செங்கல் சுமப்பது, சாந்து சட்டி மூலம் மண் சுமப்பது, இரும்பு கம்பிகளுக்கு வண்ணம் தீட்டுவது, கட்டடத்திற்கு மேல் நின்று தண்ணீர் பிடிப்பது போன்ற அனைத்து வேலைகளையும் மாணவர்களை  சித்தாளு போன்றும் தலைமை ஆசிரியர் வீ.சரவணன் ஒரு மேஸ்திரி போலவும்  செயல்பட்டு மாணவர்களிடம் வேலை வாங்கியுள்ளார்.

மாணவர்கள் வேலை செய்த வீடியோ வெளியாகி மாணவர்களின் பெற்றோர்களையும், பொதுமக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 

அரசுப் பள்ளியில் படிக்க அனுப்பும் மாணவர்களை படிக்கவிடாமல் தடுத்து, கட்டட பணிகளுக்கு பயன்படுத்திய தலைமை ஆசிரியர் மீது பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →