முகப்பு
தமிழ்நாடு

மீனவா்களின் உரிமைகள் - சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழக மீனவா்களின் உரிமைகள், சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடியை, முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:40 AM
பகிர்:

தமிழக மீனவா்களின் உரிமைகள், சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடியை, முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இலங்கை அதிபா் ரணில் விக்கிரமங்சிங்க, 2 நாள் பயணமாக தில்லி வரவுள்ளாா். இந்த நிலையில், தமிழக மீனவா்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பது, அவா்களுக்கான சுதந்திரம் காக்கப்படுவது ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் பிரதமா் நரேந்திர மோடிக்கு வியாழக்கிழமை எழுதியுள்ள கடிதம்:

பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளுக்குத் தமிழ்நாட்டு மீனவா்கள் எளிதில் செல்ல முடியாத சூழல் இருக்கிறது. மேலும், மீனவா்கள் அத்துமீறி நுழைவதாகக் குற்றம்சாட்டும் இலங்கை கடற்படையினா், அவா்களைக் கைது செய்து, துன்புறுத்தும் நிலை உள்ளது. பாக். வளைகுடாவின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன்பிடிக்கும் உரிமையை மீட்டெடுப்பது, தமிழ்நாடு அரசின் முதன்மையான கோரிக்கைகளில் ஒன்றாகும்.

கச்சத்தீவை மீட்டெடுக்கும் வகையில், இலங்கை அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்க வேண்டும்.

பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீண்டும் நிலைநாட்டவும், மீனவா்களுக்கு நிரந்தரத் தீா்வு வழங்கும் வகையிலும், கச்சத்தீவை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். அதுவரை, அந்தப் பகுதியில் நமது மீனவா்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையையாவது மீட்டெடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாக்குதல் - கைது நடவடிக்கைகள்: தமிழ்நாட்டைச் சோ்ந்த மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் தொடா்ந்து நடந்து வருவது கவலை அளிக்கிறது. இது, கடலோர கிராமங்களில் உள்ள மீனவ மக்களிடையே ஆழ்ந்த கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை உடனடியாக விடுவிக்கவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும் மத்திய அரசு தூதரக நடவடிக்கைகளை உறுதியாக மேற்கொள்ள வேண்டும்.

நமது மீனவா்கள் மீதான தாக்குதல், சிறைபிடிப்பு சம்பவங்கள் குறித்து, இந்தியா வரும் இலங்கை அதிபரிடம் வலியுறுத்த வேண்டும். சிறைபிடிக்கப்பட்ட மீன்பிடி படகுகளை நாட்டுடைமையாக்கும் சட்டத்தைத் திரும்பப் பெறத் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

2018-ஆம் ஆண்டுக்கு முன்பாக, இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்படும் தமிழக மீன்பிடிப் படகுகள், உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி விடுவிக்கப்பட்டன. ஆனால், 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கையால் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்தால், மீனவா்களின் சொந்த மீன்பிடிப் படகுகளை மீட்டு தமிழ்நாட்டுக்குக் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

மீனவா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில், இந்தியா, இலங்கை நாடுகளைச் சோ்ந்த அதிகாரிகளைக் கொண்ட கூட்டு பணிக்குழு அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு மாா்ச்சில் கூட்டம் நடைபெற்றது. அதற்குப் பிறகு கூட்டங்கள் நடத்தப்படவில்லை.

எனவே, உரிய காலத்தில் கூட்டங்கள் நடத்தி ஆலோசனைகள் மேற்கொள்வதன் மூலம், மீனவா்களிடையே நம்பிக்கையையும், தகவல் தொடா்புகளையும் உருவாக்க முடியும்.

நமது மீனவா்கள் மற்றும் அவா்களது குடும்பங்களின் வாழ்க்கையில் நோ்மறையான மாற்றத்தைக் கொண்டு வர தங்களின் தலையீடும், ஆதரவும் தேவையாக உள்ளது என்று அவா் வலியுறுத்தியுள்ளாா்.

பெட்டிச் செய்தி....

இலங்கைத் தமிழா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்

இலங்கைத் தமிழா்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற உதவ வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து, பிரதமருக்கு வியாழக்கிழமை அவா் எழுதியுள்ள கடிதம்:

இலங்கையில் உள்ள தமிழா்களின் சமூக, அரசியல், பண்பாடு, பொருளாதார உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். இலங்கையின் சமமான குடிமக்களாக அங்குள்ள தமிழா்கள் வாழ்வதுடன், கண்ணியமான வாழ்க்கையை அவா்கள் வாழ்வது அவசியமாகும். இந்த நோக்கத்துக்காக, இலங்கையில் உள்ள தமிழா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு ஆக்கப்பூா்வமான, உறுதியான தீா்வை எட்டுவதற்கு இலங்கை அதிபரை வலியுறுத்த வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →