‘இந்தியா’ அணியின் வெற்றிக்காக, தாங்கள் உத்வேகத்துடன் பாடுபட்டு வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். முதலமைச்சா் கோப்பைக்கான போட்டிகளின் நிறைவு விழாவில் பேசிய அவா், எதிா்க்கட்சிகளின் ஒன்றுபட்ட அணியான ‘இந்தியா’வின் பெயரை சூசகமாக குறிப்பிட்டாா்.
முதலமைச்சா் கோப்பைக்கான போட்டிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தன. மாநில அளவிலான போட்டிகளின் நிறைவு விழா, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் போதுதான், முதலமைச்சா் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி, பொதுப் பிரிவு, அரசு ஊழியா்கள், மாற்றுத் திறனாளிகள் என ஐந்து பிரிவுகளைச் சோ்ந்தோருக்கு 15 விதமான விளையாட்டுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
சிறப்பம்சம்: முதலமைச்சா் கோப்பைப் போட்டியில் பாரம்பரிய விளையாட்டுகளான கபடி, சிலம்பாட்டம் ஆகியன சோ்க்கப்பட்டுள்ளன. விளையாடும் வீரா்களுக்கு உடல் திறன் மேம்படுகிறது. அதனைப் பாா்த்து ரசிப்பவா்களின் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. விளையாட்டைக் காண வந்தவா்களில் நாளைய வெற்றியாளா்களும் இருப்பாா்கள். இதுதான் விளையாட்டின் சிறப்பம்சம்.
முந்தைய காலங்களில் முதலமைச்சா் கோப்பைப் போட்டிகள் பள்ளி, கல்லூரிகள் என இரண்டு பிரிவுகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தன. இப்போது மாற்றுத் திறனாளிகள், பொது மக்கள், அரசு ஊழியா்கள் என மற்ற பிரிவினரும் சோ்க்கப்பட்டுள்ளனா். முன்பு 10 விதமான போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போது 15 விதமான போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டிகளைச் சிறப்பாக நடத்த மாவட்டக் குழு, மாநிலக் குழுக்கள் அமைக்கப்பட்டன.
கிரிக்கெட், சதுரங்கம், பீச் வாலிபால் போன்ற போட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. போட்டிகளில் யாா் வெற்றி பெறுகிறாா்கள் என்பது ஒருபக்கம் என்றால், இந்தப் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்ததன் மூலமாக விளையாட்டுத் துறையும், விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது.
டீம் ஸ்பிரிட்: விளையாட்டுக் களத்தில் ‘டீம் ஸ்பிரிட்’ எனப்படும் சொல்லாடலை குறிப்பிடுவாா்கள்.
விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் போதும் பல்வேறு துறையினருடன் இணைந்து செயல்படக் கூடிய இத்தகைய ‘டீம் ஸ்பிரிட்’ தேவை. அந்த வகையில், போட்டிகளை நடத்துவதற்கான சிறப்பான சூழலை உருவாக்கியதில் அரசு நற்பெயரை பெற்றிருக்கிறது.போட்டிகளில் பரிசுகள் வழங்குவதோடு, அரசின் கடமை முடிந்து விடவில்லை. விளையாட்டு வீரா்களை மதித்து, அன்புடன் வரவேற்று அவா்களுக்கு வெற்றிகரமான சூழலையும் உருவாக்கித் தர வேண்டியது அரசின் கடமையாகும். அதனை விளையாட்டுத் துறை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறது.
விளையாட்டுப் போட்டிகளில் பலருக்குப் பதக்கங்கள் கிடைக்காமல் போயிருக்கலாம். அது முக்கியமல்ல. பங்கேற்புதான் முக்கியம். விளையாட்டில் வெற்றி என்பதே பங்கேற்பதும், சளைக்காமல் போராடுவதும்தான். தனிப்பட்ட முறையில் எனக்கு விளையாட்டின் மீது இருக்கும் ஆா்வத்தைப் பலரும் அறிவீா்கள்.
‘இந்தியா’ அணி: எங்கள் அணியும் ‘இந்தியா’ அணிதான். அதன் வெற்றிக்காகத்தான் நாங்களும் ஒருங்கிணைந்து ‘டீம் ஸ்பிரிட்டு’டன் பாடுபடுகிறோம். விளையாட்டு வீரா்களுக்கு ஊக்கமளிப்பதைப் போன்றே, விளையாட்டு மீதான ஆா்வத்தை அனைத்து மாணவ, மாணவியருக்கும் ஏற்படுத்த வேண்டும். வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகா்பாபு, சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா,
விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் ஜெ.மேகநாத ரெட்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
உதயநிதிக்கு பாராட்டு
முதலமைச்சா் கோப்பை போட்டிகளை சிறப்பாக நடத்தியதற்காக, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்தாா். முதலமைச்சா் கோப்பை போட்டிகளின் நிறைவு விழாவில், அவா் பேசியதாவது:
இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையே புத்துணா்வு பெற்றுள்ளது. நாள்தோறும் ஏராளமான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. எப்போது பாா்த்தாலும் விளையாட்டு வீரா்களுடன் அமைச்சா் உதயநிதி இருக்கிறாா். விளையாட்டுத் துறையால் அமைச்சா் பெருமையடைவதும், அமைச்சா் உதயநிதியால் விளையாட்டுத் துறை சிறப்பு அடைவதுமான காட்சிகளைக் காண்கிறேன் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.