செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை
மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மத்தியப் படையினர் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை செய்தனர்.
இது குறித்த விவரம்:
தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருக்கும் வி.செந்தில் பாலாஜி. கரூர் மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்து வருகிறார் செந்தில் பாலாஜி. இவர் கடந்த 2011–ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சியின் போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, போக்குவரத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கடந்த 2018ஆம் ஆண்டு வழக்குகளை பதிவு செய்தனர்.
இந்த மோசடியில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறையும் புதிதாக ஒரு வழக்கை பதிவு செய்து, விசாரணை செய்தது. மத்தியக் குற்றப்பிரிவு வழக்கை ரத்து செய்யும்படியும், அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை கோரியும் செந்தில் பாலாஜி, உயர்நீதிமன்றத்தில் முறையீட்டதினால், மத்தியக் குற்றப்பிரிவு வழக்குகள் ரத்து செய்யப்பட்டது. அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றம் அனுமதி:
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் மத்தியக் குற்றப்பிரிவு ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், அமலாக்கத்துறை விசாரணை அனுமதி வழங்கியும் அண்மையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
இந்நிலையில் கடந்த மே மாதம் 26-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.
அமலாக்கத்துறை சோதனை:
இதற்கிடையே சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் சோதனையிடுவதற்கு அமலாக்கத்துறையினர் செவ்வாய்க்கிழமை வந்தனர். அவர்கள் வந்தபோது, செந்தில் பாலாஜி நடைப் பயிற்சிக்காக வெளியே சென்றிருந்ததினால், சிறிது நேர காத்திருப்புக்கு பின்னர் சோதனையிட அனுமதிக்கப்பட்டனர்.
இச்சோதனையையொட்டி, அங்கு துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
அதேபோல சென்னை காவல் துறையினரும் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதேபோல அதேப் பகுதியில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை செய்தனர்.
மேலும், கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீடு மற்றும் செந்தில் பாலாஜியின் பெற்றோர் வசிக்கும் ராமேஸ்வரபட்டியில் உள்ள வீடு, செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் வெங்கமேட்டைச் சேர்ந்த சண்முகம் வீடு ஆகிய இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை செய்தனர்.
முழு ஒத்துழைப்பு:
ஏற்கெனவே செந்தில்பாலாஜி மீது பதியப்பட்ட சட்டவிரோத பணபரிமாற்ற வழக்குக்காக ஆதாரத்தை திரட்டும் வகையில் நடைபெறுவதாக அமலாக்த்துறையினர் தெரிவித்தனர். அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும். எதற்காக சோதனை, என்ன நோக்கத்துக்காக சோதனை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எந்த ஆவணங்கள் கைப்பற்றினாலும், அது தொடர்பாக விளக்கம் அளிக்கவும் தயாராக இருக்கிறேன் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
அதேவேளையில் சோதனை முழுமையாக நிறைவு பெற்ற பின்னரே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், நகை, பணம் குறித்த விவரங்களை தெரிவிக்க முடியும் என அமலாக்கத்துறையினர் தெரிவித்தனர்.
இச்சோதனை அரசியல் கட்சிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: குரூப்-4 பணியிடங்கள் உயர்வு அறிவிப்பு வெளியாகுமா?