தமிழ்நாடு

செந்தில் பாலாஜி பேசவே சிரமப்படுகிறார்:  மருத்துவமனையில் பார்த்த நேரு தகவல்!

அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சு வலியில் படுத்துள்ளார், அவர் பேசவே சிரமப்படுகிறார் என்று மருத்துவமனையில் அவரை பார்த்த அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார். 

DIN

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சு வலியில் படுத்துள்ளார், அவர் பேசவே சிரமப்படுகிறார் என்று மருத்துவமனையில் அவரை பார்த்த அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார். 

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருக்கும் வி.செந்தில் பாலாஜி. கரூர் மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்து வருகிறார். செந்தில் பாலாஜி, கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, போக்குவரத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்குகளை பதிவு செய்தனர்.
 
இந்த மோசடியில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறையும் புதிதாக ஒரு வழக்கை பதிவு செய்து, விசாரணை செய்தது. மத்தியக் குற்றப்பிரிவு வழக்கை ரத்து செய்யும்படியும், அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை கோரியும் செந்தில் பாலாஜி, உயர்நீதிமன்றத்தில் முறையீட்டதினால், மத்தியக் குற்றப்பிரிவு வழக்குகள் ரத்து செய்யப்பட்டது. அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் மத்தியக் குற்றப்பிரிவு ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், அமலாக்கத்துறை விசாரணை அனுமதி வழங்கியும் அண்மையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

இந்த நிலையில் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.

அமலாக்கத்துறை சோதனை: இதற்கிடையே சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீடு, தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகம், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீடு, கரூரில் உள்ள செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்கள் உள்பட 11 இடங்களில் அமலாக்கத்துறையினர் செவ்வாய்க்கிழமை காலை சோதனை செய்தனர். சோதனை நடைபெற்ற பகுதிகளில் துணை ராணுவப்படையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். 

இந்த சோதனை மாலைக்கு பின்னர் படிப்படியாக ஒவ்வொரு இடத்திலும் நிறைவு பெற்றது. ஆனால் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

அதேவேளையில் துணை ராணுவத்தின் அதி விரைவுப்படையினர் உள்ளிட்ட மத்திய காவல் படையினர் அங்கு அதிகளவில் வரவழைக்கப்பட்டனர். 

இந்நிலையில், நள்ளிரவு 2 மணியளவில் சோதனை நிறைவு பெற்றபோது, செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு தங்களுடன் காரில் வருமாறு கூறினர். இதையடுத்து செந்தில் பாலாஜி சுமார் நள்ளிரவு 2.5 மணியளவில் அமலாக்கத்துறையினரின் வாகனத்தில் மத்திய துணை ராணுவப்படை பாதுகாப்புடன் அவர் வீட்டில் இருந்து வெளியே அழைத்து செல்லப்பட்டார். வாகனத்தில் செல்லும்போது, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதினால் நிலைகுலைந்து, வாகனத்தின் பின் இருக்கையில் படுத்தார். 

இதையடுத்து அவர் திருவல்லிக்கேணியில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அதேவேளையில் சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியை கைது செய்ததாக அமலாக்கத்துறையினர் தெரிவித்தனர்.

துணை ராணுவத்தினர் குவிப்பு:

செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், அங்கு துணை ராணுவத்தினர், அதிவிரைப்படையினர், அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். 

வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ பேட்டி: அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து சரியான எந்த தகவலையும் அமலாக்கத்துறை தெரிவிக்க வில்லை; மனித உரிமைகளுக்கு எதிராக கடும் சித்திரவதைக்கு அவர் ஆளாக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கைது செய்யப்பட்டாரா இல்லையா என்பதை கூட அமலாக்கத்துறை தெரிவிக்க வில்லை என செந்தில் பாலாஜியின் வழக்குரைஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தகவலறிந்து தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நகர்ப்புற வளர்ச்சித்துறை கே.என்.நேரு உள்ளிட்டோர் அங்கு வந்தனர்.

செந்தில் பாலாஜியால் பேச முடியவில்லை: அங்கு அவர்கள், செந்தில் பாலாஜி உடல் நிலை குறித்து கேட்டறிந்தனர்.

செந்தில் பாலாஜியை சந்தித்துவிட்டு வெளியே வந்த அமைச்சர் கே.என்.நேரு அளித்த பேட்டி:

அனைத்து மருத்துவர்கள் அங்கு இருக்கின்றனர். செந்தில் பாலாஜியால் பேச முடியவில்லை. மிகவும் சிரமப்படுகிறார். அவரை தட்டிக் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். ஒரு மணி நேரம் காத்திருந்து பார்த்தேன். அமலாக்கத்துறை, துணை ராணுவத்தினர் அனுமதி பெற்றே செந்தில் பாலாஜியை சந்தித்தேன் என் கூறினார். 

துன்புறுத்தல் புகார்: இதற்கிடையே விசாரணையின்போது, செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் துன்புறுத்தியதாக திமுகவினர் புகார் தெரிவித்தனர். இதன் விளைவாகவே செந்தில் பாலாஜி, மார்பு வலி ஏற்பட்டு சுயநினைவு இல்லாமல் சென்றுவிட்டார் என குற்றம்சாட்டினர்.

செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கை திமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சியினரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு கருதி சென்னையில் முக்கியமான பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 
முக்கியமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையை சுற்றிலும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருமல் மருந்து மரணங்கள்: நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன்

உடல் கூராய்வு: ரௌடி நாகேந்திரனின் மனைவி கோரிக்கை நிராகரிப்பு!

ஆவடி ராணுவ வாகன தொழிற்சாலையில் வேலை!

டெஸ்ட்டில் 7-ஆவது சதமடித்த ஜெய்ஸ்வால்..! சச்சின் சாதனைகளுக்கு ஆபத்து!

தமிழ்நாடு ஒத்துழைக்கவில்லையா? ம.பி. அரசுக்கு மா. சுப்பிரமணியன் பதில்!

SCROLL FOR NEXT