கோவில்பட்டியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம்
கோவில்பட்டி, கயத்தாறு, எட்டயபுரம் ஆகிய வட்டங்களுக்கு உட்பட்ட பட்டியல் சாதி அருந்ததியர் சமூக மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம்.
கோவில்பட்டி: கோவில்பட்டி, கயத்தாறு, எட்டயபுரம் ஆகிய வட்டங்களுக்கு உட்பட்ட பட்டியல் சாதி அருந்ததியர் சமூக மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி திங்கள்கிழமை ஆதித்தமிழர் கட்சியினர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு ஆதித்தமிழர் கட்சியின் மாவட்டச் செயலர் நம்பிராஜ் பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலர் முத்துச்சாமி, மாவட்ட நிதி செயலர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில், கோவில்பட்டி, எட்டயபுரம், கயத்தாறு வட்டங்களுக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி, தீத்தாம்பட்டி, அச்சங்குளம், செவல்பட்டி, கொ.தீத்தாம்பட்டி, புங்கவர்நத்தம், காமநாயக்கன்பட்டி, படர்ந்தபுளி, துரைச்சாமிபுரம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் தகுதி வாய்ந்த அருந்ததியர் சமூக மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
போராட்டத்தில், மாவட்ட இணை செயலர் சந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் காளிமுத்து, ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், கயத்தார் ஒன்றிய பொறுப்பாளர் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து போராட்டக் குழுவினர் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் நிஷாந்தினியிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.