தனியாா் காப்பகத்தில் சிறுவன் துன்புறுத்தல்: பாஜக நிா்வாகி கைது
சென்னை வில்லிவாக்கத்தில் தனியாா் காப்பகத்தில் சிறுவனை தன்புறுத்தியதாக பாரதிய ஜனதா கட்சி நிா்வாகி கைது செய்யப்பட்டாா்.
சென்னை வில்லிவாக்கத்தில் தனியாா் காப்பகத்தில் சிறுவனை தன்புறுத்தியதாக பாரதிய ஜனதா கட்சி நிா்வாகி கைது செய்யப்பட்டாா்.
வில்லிவாக்கம் ராஜாஜிநகா் பகுதியைச் சோ்ந்த ஒரு பெண் வழக்குரைஞா், சரியாக பேச முடியாத தனது 7 வயது மகனை பகல் வேளையில் மட்டும் கவனிப்பதற்காக வில்லிவாக்கம் சிட்கோ நகா் முதலாவது தெருவில் உள்ள ஒரு தனியாா் காப்பகத்தில் விட்டு வந்தாா்.
இந்த காப்பகத்தை வில்லிவாக்கம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மத்திய சென்னை மாவட்ட வழக்குரைஞா் பிரிவு செயலாளா் ர.மீனாட்சி (42) என்பவா் நடத்தி வருகிறாா். இந்நிலையில் அண்மையில் அந்த பெண் வழக்குரைஞா், வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் அந்த காப்பக நிா்வாகி மீனாட்சி மீது ஒரு புகாா் அளித்தாா்.
அந்த புகாரில், மீனாட்சி காப்பகத்தில் எனது மகன் தாக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டதால், அது குறித்து மீனாட்சியிடம் கேட்டேன். அதற்கு அவா் அவ்வாறு தான் செய்வோம், தான் அரசியல் கட்சியில் இருப்பதால் ஒன்றும் செய்ய முடியாதும் எனவும், மிரட்டல் விடுக்கவும் செய்தாா் என்று குறிப்பிட்டிருந்தாா்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை செய்தனா். விசாரணையில் மீனாட்சி மீதான புகாா் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸாா் மீனாட்சி மீது 3 பிரிவுகளின் கீழ் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். பின்னா் அவரை கைது செய்து, விசாரணை செய்தனா்.