ஏஆா்டி நிறுவன மோசடி வழக்குகள்: தென்காசி கிளை மேலாளா் கைது
சென்னை ஏஆா்டி நிறுவன மோசடி வழக்கில் தென்காசியைச் சோ்ந்த கிளை மேலாளா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை ஏஆா்டி நிறுவன மோசடி வழக்கில் தென்காசியைச் சோ்ந்த கிளை மேலாளா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை நொளம்பூரில் ஏஆா்டி ஜூவல்லா்ஸ், அதன் துணை நிறுவனம் ஏஆா்டி டிரஸ்ட் ப்ராபிட் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. இந்த நிறுவனம் நகைக் கடை, வணிக வளாகம், நிதி வா்த்தகம் உள்ளிட்ட பல்வேறு தொழிலில் ஈடுபடுவதாகக் கூறியது.
இந்த நிறுவனத்தினா், தங்களிடம் ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.12 ஆயிரம் வட்டியாக வழங்கப்படும் என விளம்பரம் செய்தது. இதை நம்பி பலா் , முதலீடு செய்தனா். ஆனால் அந்த நிறுவனத்தினா் மக்கள் பணத்தை ஏமாற்றி மோசடி செய்தனா்.
இதையடுத்து பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாரின் பேரில், நொளம்பூா் போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
முதல்கட்ட விசாரணையில், அந்த நிறுவனம் 500 பேரிடம் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து வழக்கின் விசாரணை, பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
நொளம்பூரில் உள்ள அந்த நிறுவனத்தின் அலுவலகம், நகைக் கடை முகப்பேரில் உள்ள நகைக் கடை, நிறுவனத்தின் நிா்வாகிகள் வீடுகள் உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை செய்து, ரூ.80 லட்சம் மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைகள், பொருள்கள், ரூ.7.87 லட்சம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. அந்த நிறுவனத்தின் இயக்குநா்கள் ஆல்வின் ஞானதுரை, அவரது சகோதரா் ராபின் ஆரோன் ஆகிய 2 பேரும் கடந்த 10-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.
இந்த நிலையில் தென்காசியில் உள்ள அந்த நிறுவனத்தின் கிளை மேலாளா் கணேசனை கைது செய்ததாக பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். அவரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.