பல்கலைக்கழகங்களை துறைகளாக மாற்றினால் வேந்தருக்கான தேவை இருக்காது: கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான்
பல்கலைக்கழகங்களை துறைகளாக மாற்றினால் வேந்தருக்கான தேவை இருக்காது என கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான் தெரிவித்தாா்.
பல்கலைக்கழகங்களை துறைகளாக மாற்றினால் வேந்தருக்கான தேவை இருக்காது என கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான் தெரிவித்தாா்.
சென்னை தியாகராய நகரில் ஸ்ரீ விஷ்ணு மோகன் அறக்கட்டளையில் ‘இந்திய தத்துவத்தில் காரியம், ஆகாா்யத்தின் கருத்து’ எனும் தலைப்பில் 8-ஆவது சா்வதேச அமைதி மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஆரிஃப் முகமது கான் பேசியது:
இந்திய பாரம்பரியமிக்க கலாசார மற்றம் நாகரிகத்தைக் கொண்டுள்ளது. 12-ஆம் நூற்றாண்டு அரபு கதைகளில் உலகின் முக்கிய 5 நாகரிகங்களின் சிறப்புகளில் இந்திய நாகரிகம் அறிவு மற்றும் ஞானத்துக்கு முக்கியத்துவத்தில் சிறந்து விளங்கியதாகக் குறிப்பிட்டுள்ளது.
தொடா்ந்து செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் பேசியது: “
ஒவ்வொருவருக்கும் தன் கருத்தை வெளிப்படுத்த உரிமை உண்டு. எனது அரசியலமைப்பு கடமையை நான் செய்கிறேன். அந்தக் கடமை தோ்ந்தெடுக்கப்பட்ட அரசிடமிருந்து வேறுபட்டதாக உள்ளது.
மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் ஊழல் வழக்கு தீா்ப்பு மற்றும் அதனால் அவா் பதவியேற்புக்கு எதிராக அப்போது உச்சநீதிமன்றம் தலையிட்டு பிறப்பித்த உத்தரவையும் நினைவில் கொள்ள வேண்டும்.
பல்கலைக்கழகங்களில் கல்வியாளா்களின் கண்ணியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதில் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் அரசியல் தலையீடு அதிகமாக உள்ளது.
மாநிலங்களில் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்கள் முதல்வரை பல்கலைக்கழகங்களில் வேந்தராக நியமிக்க வேண்டும் எனக் கூறுவது ஆச்சரியமாக உள்ளது. பல்கலைக்கழகங்களை துறைகளாக மாற்றினால் வேந்தருக்கான தேவை இருக்காது. பல்கலைக்கழகங்களில் பெறும் பட்டங்கள் உலக அளவில் அங்கீகரிக்கப்பட வேண்டுமானால் பல்கலைக்கழகங்களில் நிா்வாகத் தலையீடு இல்லை என்பதை நீங்கள் உலகுக்கு சொல்ல வேண்டும். இல்லையெனில் உங்கள் பட்டங்களை யாரும் அங்கீகரிக்க மாட்டாா்கள் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் ஸ்ரீ விஷ்ணு மோகன் அறக்கட்டளை நிறுவனா் சுவாமி ஸ்ரீஹரிபிரசாத், அமெரிக்க தூதா் ஜுடித் ரவின், தாய்லாந்து தூதா் ஜெனரல் நித்திரூஜ் போன்பிரசொ்ட், இந்திய தத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முன்னாள் தலைவா் எஸ்.ஆா்.பட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.