தமிழ்நாட்டில் 3,585 ஹெக்டேர் நிலங்கள் புதிய காப்புக் காடுகளாக மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த இரண்டு ஆண்டுகளில், அதாவது 2021-2023-இல் தமிழ்நாடு வனச்சட்டம், 1882-இன் பிரிவு 16-ன் கீழ் திண்டுக்கல், தருமபுரி, மதுரை, கள்ளக்குறிச்சி, தேனி, சிவகங்கை, நாமக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் 3585.38.56 ஹெக்டேர் அளவிற்கு கீழ்காணும் 24 புதிய காப்புக் காடுகளாக தமிழ்நாடு அரசு அறிவிக்கை செய்துள்ளது.
காடு மற்றும் மரங்களின் பரப்பை அதிகரிக்கும் உன்னத இலக்கை அடையும் வகையில் எதிர்வரும் 10 ஆண்டுகளில் 265 கோடி மரங்களை நடவு செய்து மாநிலத்தின் புவியியல் வனம் மற்றும் மரங்களின் பரப்பளவை 33% ஆக்கும் வகையில் வனப்பகுதிக்கு வெளியே உள்ள தரங்குன்றிய வன நிலப்பரப்பு மற்றும் பிற தரங்குன்றிய நிலப்பரப்புகளை மீட்டெடுக்கும் பொருட்டு 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பசுமைத் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு பல பகுதிகளை “காப்புக் காடுகள்” என்ற பிரிவின் கீழ் காப்புக்காடுகளாக அறிவிக்கை செய்யும் பட்சத்தில் வனப் பாதுகாப்புச் சட்டம் 1980-இன் படி நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். வனப் பாதுகாப்புச் சட்டம் 1980-இன் பயன்பாடு, அரசுப் பதிவுகளில் காடுகளாகப் பதிவு செய்யப்பட்ட பகுதிகளுக்கு மிகச் சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.