தமிழ்நாடு

சிதம்பரம் கோயிலை தீட்சிதர்களின் பிடியிலிருந்து மீட்க வேண்டும்: முத்தரசன் பேட்டி

DIN

தஞ்சாவூர்: சிதம்பரம் கோயிலை தீட்சிதர்களின் பிடியிலிருந்து மீட்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா. முத்தரசன் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:

சிதம்பரம் கோயில் பிரச்னையில் ஏறத்தாழ 200 தீட்சிதர்கள்தான் அராஜகம் செய்கின்றனர். இக்கோயிலில் அனைவரும் வழிபடுவதற்கு தடையாக இருக்கக் கூடாது என்றுதான் அறநிலையத் துறை கூறுகிறது. இதைத் தடுக்கும் தீட்சிதர்களை காவல் துறை கைது செய்ய ஏன் தயங்குகிறது. அந்த அளவுக்கு தீட்சிதர்கள் செல்வாக்கு படைத்தவர்களா என்பது புரியவில்லை. எனவே, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள தீட்சிதர்களை காவல் துறையினர் கைது செய்ய வேண்டும். இக்கோயிலை தீட்சிதர்களின் பிடியிலிருந்து தமிழ்நாடு அரசு மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருகிற 2024 மக்களவைத் தேர்தலில் அனைத்து கட்சிகளும் அரசியல் ரீதியாக அணுக வேண்டும். பாஜக கடந்த 9 ஆண்டுகளில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியவற்றை எடுத்து பேசி வாக்கு சேகரிக்க வேண்டும். ஆனால் பாஜக கலவரத்தை தூண்டி வெற்றி பெற வேண்டும் என்கிற குறுகிய நோக்கத்துடன் செயல்படுகிறது. கலவரம் மூலமாக மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வர பாஜக துடிக்கிறது. மணிப்பூர் மாநில கலவரத்தை உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அங்கு அமைதியை நிலைநாட்ட பிரதமர் மோடி எந்தவித முயற்சியும் செய்யவில்லை. 

பல்வேறு மதங்கள், ஜாதிகள் கொண்ட இந்தியாவில் பொது சிவில் சட்டம் சாத்தியமில்லாதது. ஆனால் இதை வைத்து கலவரத்தை தூண்ட பிரதமர் மோடி முயற்சி செய்கிறார். 

தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றது முதல் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பாலமாக இருக்க வேண்டிய ஆளுநர் முரண்பாடான கருத்துக்களைக் கூறி சர்ச்சைகளை உருவாக்குவதில்தான் கவனம் செலுத்தி வருகிறார். 

சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், தான் விரும்புகிற உறுப்பினர்களை அமைச்சர்களாக நியமிக்கலாம் என அரசியல் அமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால் செந்தில் பாலாஜி விஷயத்தில் அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படுவதற்கு ஆளுநருக்கு யார் அதிகாரம் வழங்கியது.

மேட்டூர் அணையிலிருந்து 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டால்தான் கடைமடை பகுதிக்குச்  சென்றடையும். கடைமடை பகுதிக்கு முழுமையாக தண்ணீர் சென்ற பிறகு முறை பாசனம் வைக்கலாம் என்றார் முத்தரசன்.

அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலர் முத்து. உத்திராபதி, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் வீர. மோகன் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விதவிதமான மோசடிகள்: 18 லட்சம் சிம் கார்டுகள் முடக்கமா?

5-ம் கட்டத் தேர்தல்: மகனுடன் சென்று வாக்கு செலுத்திய சச்சின் டெண்டுல்கர்

தந்தையுடன் வாக்களித்த நடிகை குஷி கபூர்!

ரேபரேலி வாக்குச் சாவடியில் ராகுல் ஆய்வு!

சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசியதில்லை: மோடி

SCROLL FOR NEXT