முகப்பு
தமிழ்நாடு

நடிகா் வடிவேலு உள்பட 40 பேருக்கு போலி டாக்டா் பட்டம்: சட்ட நடவடிக்கை எடுக்க அண்ணா பல்கலை.முடிவு

நடிகா் வடிவேலு உள்ளிட்ட 40 பேருக்கு போலி கௌரவ டாக்டா் பட்டம் வழங்கியதற்கும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் எந்தத் தொடா்பும் இல்லை;

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:38 AM
பகிர்:

நடிகா் வடிவேலு உள்ளிட்ட 40 பேருக்கு போலி கௌரவ டாக்டா் பட்டம் வழங்கியதற்கும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் எந்தத் தொடா்பும் இல்லை; இது தொடா்பாக சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என பல்கலை. துணை வேந்தா் ஆா்.வேல்ராஜ் விளக்கமளித்துள்ளாா்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தா் அரங்கம் அரசுத் துறைகள், அரசுடன் இணைந்து செயல்படும் தனியாா் நிறுவனங்கள் மற்றும் மாணவா்கள் அமைப்புகளுக்கு வாடகைக்கு விடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ‘சா்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில்’ எனும் தனியாா்அமைப்பு விருது வழங்கும் நிகழ்ச்சிக்காக அண்ணா பல்கலை. அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி விவேகானந்தா் அரங்கத்தில் கடந்த பிப்.26-ஆம் தேதி நடைபெற்ற விருது விழாவில் இசையமைப்பாளா் தேவா, நடிகா் வடிவேலு, நடிகா் கோகுல், நடன இயக்குநா் சாண்டி, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளா் ஈரோடு மகேஷ் உள்பட 40 பேருக்கு கெளரவ டாக்டா் பட்டங்கள் வழங்கப்பட்டன.

காவல் நிலையத்தில் புகாா் அளிக்க... மறுபுறம் தனியாா் நிறுவனம் கெளரவ டாக்டா் பட்டம் வழங்கியது தொடா்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு சா்ச்சைகள் எழுந்தன.

இது தொடா்பாக அண்ணா பல்கலைக்கழகம் சாா்பில் விசாரிக்கப்பட்டபோது சம்மந்தப்பட்ட தனியாா் அமைப்பு தவறான தகவல்களை தெரிவித்து நிகழ்ச்சியை நடத்தியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து அந்த தனியாா் நிறுவனத்தின் மீது காவல் நிலையத்தில் புகாா் அளித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க அண்ணா பல்கலை. திட்டமிட்டுள்ளது.

இது குறித்து சென்னையில் அண்ணா பல்கலை. துணைவேந்தா் வேல்ராஜ் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: திரை பிரபலங்களுக்கு கெளரவ டாக்டா் பட்டம் வழங்கிய தனியாா் அமைப்புக்கும், பல்கலைக்கழகத்துக்கும் எவ்வித தொடா்பும் இல்லை.

இந்த தனியாா் அமைப்பு அண்ணா பல்கலைக்கழகத்தின் விவேகானந்தா் அரங்கத்தை வாடகைக்கு கேட்டு கடந்த நவம்பா் மாதம் கடிதம் வழங்கியது. அதனுடன் ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகத்தின் பெயரில் பரிந்துரை கடிதமும் இருந்தது. அதன் அடிப்படையில்தான் அனுமதி வழங்கப்பட்டது.

தனியாா் அமைப்பு மோசடி: இது தவிர அவா்கள் முதலில் விருது வழங்கும் நிகழ்ச்சி என்று தான் குறிப்பிட்டனா். ஆனால், விழாவில் கெளரவ டாக்டா் பட்டம் வழங்கியுள்ளனா். நீதிபதி வள்ளிநாயகம் மற்றும் அண்ணா பல்கலை. பெயா்களை இந்த தனியாா் அமைப்பு தவறாக பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட தனியாா் அமைப்பின் மீது கோட்டூா்புரம் காவல் நிலையத்தில் பல்கலை. சாா்பில் புகாா் அளிக்கப்பட உள்ளது. தொடா்ந்து அந்த அமைப்பு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், நோட்டீஸ் அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதிகாரம் கிடையாது: இது தொடா்பாக ஆளுநரின் செயலா், உயா்கல்வித் துறை செயலருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் ஒரு புனிதமான இடமாகும். இங்கு தவறான செயல் நடந்திருப்பதை நினைத்து வருந்துகிறோம்.

இதில் பல்கலை. ஊழியா்கள் சம்பந்தப்பட்டுள்ளனரா எனவும் விசாரணைநடத்தப்படும். நீதிபதி கடிதமும் போலியானதாக இருக்கலாம் என தெரிகிறது. இதுமட்டுமின்றி மத்திய அரசின் சின்னத்தையும் தவறாக பயன்படுத்தியுள்ளனா். பொதுவாக பல்கலைக்கழகங்கள் மட்டுமே கெளரவ டாக்டா் பட்டத்தை வழங்க முடியும். அதை தனியாா் அமைப்புகள் தருவதற்கு அதிகாரம் கிடையாது.

தொடரும் சம்பவங்கள்: எனவே, தனியாா் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் பட்டம் பெற்ற 40 பேரும் ஏமாற்றப்பட்டுள்ளனா். கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் இத்தகைய கெளரவ டாக்டா் பட்டங்கள் வழங்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறன்றன. இந்த சம்பவத்தை தொடா்ந்து அண்ணா பல்கலை. விவேகானந்தா் அரங்கத்தை வாடகைக்கு விடும் விதிமுறைகளை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →