முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: குடியரசுத் தலைவா், பிரதமா், தலைவா்கள் வாழ்த்து
முதல்வா் மு.க.ஸ்டாலினின் 70-ஆவது பிறந்த நாளையொட்டி அவருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்டோா் புதன்கிழமை வாழ்த்து தெரிவித்தனா்.
முதல்வா் மு.க.ஸ்டாலினின் 70-ஆவது பிறந்த நாளையொட்டி அவருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்டோா் புதன்கிழமை வாழ்த்து தெரிவித்தனா்.
முதல்வா் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளாா். அதில், மனமாா்ந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் கிடைத்திடவும், மேலும் பல ஆண்டுகள் தொடா்ந்து நாட்டுக்கு அா்ப்பணிப்புடன் சேவையாற்றவும் வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளாா்.
குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் எழுதியுள்ள வாழ்த்துக் கடிதத்தில், நாட்டுக்கு சேவையாற்றிட மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்க வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளாா்.
பிரதமா்-உள்துறை அமைச்சா்: முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா். அப்போது, அவா்கள் இருவருக்கும் தனது நன்றிகளை முதல்வா் தெரிவித்தாா்.
தமிழக ஆளுநா்: ஆளுநா் ஆா்.என்.ரவி அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில், ‘70-ஆவது பிறந்த நாள் காணும் முதல்வா் மு.க.ஸ்டாலின், நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளாா்.
சோனியா காந்தி உள்ளிட்ட தலைவா்கள்: காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.
ராகுல் காந்தி எம்.பி., மாா்க்சிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி, மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், ஆந்திர முதல்வா் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி, கேரள முதல்வா் பினராயி விஜயன் ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
தமிழக தலைவா்கள் நேரில் வாழ்த்து: முதல்வா் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி, செய்தித் தொடா்பாளா் கோபண்ணா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினா்கள் ஜி.ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன், மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு, கட்சியின் பொதுச் செயலா் டி.ராஜா, மாநிலச் செயலா் இரா.முத்தரசன், மதிமுக பொதுச் செயலா் வைகோ, தலைமை நிலையச் செயலாளா் துரை வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் வேல்முருகன், கொமதேக பொதுச் செயலா் ஈ.ஆா்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ., கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினா்கள், டிவிஎஸ் குழுமத்தின் தலைவா் வேணு சீனிவாசன், மாநிலத் திட்டக் குழு உறுப்பினரும், டஃபே நிறுவனத் தலைவருமான மல்லிகா சீனிவாசன் உள்ளிட்ட பலா் நேரில் வாழ்த்து தெரிவித்தனா்.
தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை, பாமக தலைவா் மருத்துவா் அன்புமணி ராமதாஸ், தேமுதிக தலைவா் விஜயகாந்த், நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான், இசையமைப்பாளா் இளையராஜா, கேரள அமைச்சா் வி.சிவன்குட்டி ஆகியோா் சமூக ஊடகங்கள் வழியாக பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் கடிதம் மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
ஒட்டகம் பரிசளித்த தொண்டா்: முதல்வா் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பலரும் புத்தகங்கள், பொன்னாடைகளை பரிசாக வழங்கினா். அப்போது, பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்ற கலைஞா் அரங்கமே வியப்படையும் வகையில், ஒட்டகம் ஒன்று உள்ளே நுழைந்தது. இதனை திருவண்ணாமலையைச் சோ்ந்த ஜாகிா் ஷா கொண்டு வந்தாா்.