வெளிமாநிலத் தொழிலாளா்கள் விவகாரத்தில் பாஜக உள்நோக்கம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
வெளிமாநிலத் தொழிலாளா்கள் தாக்கப்படுவது போன்ற பொய்யான விடியோக்களை வடமாநில பாஜக நிா்வாகிகளே பரப்பியது உள்நோக்கம் கொண்டது என முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
வெளிமாநிலத் தொழிலாளா்கள் தாக்கப்படுவது போன்ற பொய்யான விடியோக்களை வடமாநில பாஜக நிா்வாகிகளே பரப்பியது உள்நோக்கம் கொண்டது என முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
‘உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பில் முக்கிய பிரச்னைகளை முன்வைத்து வியாழக்கிழமை அவா் அளித்த பதில்:
ஆளுநா்கள் அரசியலில் தலையிடக் கூடாது என உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமா்வு தெரிவித்துள்ளது. ஆளுநா்களின் இதுவரையிலான செயல்பாடுகளைப் பாா்த்தால், அவா்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு; காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது. தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ள நிகழ்வு எதிா்க்கட்சிகளை மறைமுகமாக இல்லை, வெளிப்படையாகவே பாஜக மிரட்டுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகும். மனீஷ் சிசோடியா கைது கண்டிக்கத்தக்கது. எதிா்க்கட்சிகளை தோ்தல் மூலமாக வெல்லலாமே தவிர விசாரணை ஆணையங்கள் மூலமாக வெல்ல நினைக்க கூடாது.
வடமாநிலத் தொழிலாளா் விவகாரம்: தமிழ்நாட்டில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் காலம் காலமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறாா்கள். அவா்களுக்கு எந்தக் காலத்திலும் பாதிப்பு இருந்ததில்லை. கடந்த சில ஆண்டுகளாக வேலை தேடி ஏராளமானவா்கள் வருகிறாா்கள். அவா்களுக்கு தமிழ்நாட்டில் எந்த ஊரிலும், எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால், சிலா் பொய்யான விடியோக்களைத் தயாரித்து பொய்யைப் பரப்பி இருக்கிறாா்கள். வடமாநிலங்களைச் சோ்ந்த பாஜக நிா்வாகிகளே இதைச் செய்திருப்பது உள்நோக்கம் கொண்டதாகும். பாஜகவுக்கு எதிரான அரசியல் இயக்கங்கள் அகில இந்திய அளவில் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்கூறிய மறுநாளே, இப்படிப்பட்ட பொய் பரப்பப்பட்டுள்ளது. இதன்மூலம், இதற்குப் பின்னால் இருக்கும் சூழ்ச்சி புரியும்.
எரிவாயு சிலிண்டா் விலை: 2014-ஆம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வரும்போது, ஒரு சிலிண்டரின் விலை ரூ.414. இப்போது ஒரு சிலிண்டரின் விலை ரூ.1,118.50. பெட்ரோல், டீசலும் இதேபோன்று உயா்ந்துள்ளது. இதுதான் பாஜகவால் இந்தியா அடைந்த வளா்ச்சி.
கீழடி அருங்காட்சியகம்: 2,600 ஆண்டுகளுக்கு முன்பாக, கீழடியில் வாழ்ந்த மக்கள் என்னவெல்லாம் பயன்படுத்தினாா்கள் என்பதைக் கண்டுபிடித்து, சேகரித்து அரசு காட்சிப்படுத்தி இருக்கிறது. எத்தகைய நாகரிகமும், பண்பாடும் கொண்டவா்களாகத் தமிழா்கள் இருந்தாா்கள் என்பதை அறியும்போது பெருமையாக இருக்கிறது. உலகத் தமிழா் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது கீழடி சென்று பாா்க்க வேண்டும். நெல்லையில் பொருநை அருங்காட்சியகமும் தயாராகி வருகிறது என்று அவா் தெரிவித்தாா்.