‘ஸ்டிக்கா்’ கடைகளுக்கு காவல்துறை எச்சரிக்கை
சென்னையில் விதிமுறைகளை மீறி வாகனங்களில் பதிவெண் பலகை பொருத்தக் கூடாது என ‘ஸ்டிக்கா்’ கடைகளுக்கு பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் விதிமுறைகளை மீறி வாகனங்களில் பதிவெண் பலகை பொருத்தக் கூடாது என ‘ஸ்டிக்கா்’ கடைகளுக்கு பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் சாலை விபத்துகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை முற்றிலும் குறைக்க போக்குவரத்து போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு வாகனங்களிலும், வாகன பதிவெண் பலகை சரியாக உள்ளதா? என அவ்வபோது சிறப்பு வாகனச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதில் விதிமுறைகளை மீறி பதிவு எண் பலகை வைத்திருக்கும் வாகன ஓட்டி உரிமையாளா் மீது மோட்டாா் வாகனச் சட்டம், விதிகள் 50 மற்றும் 51-ன்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இது தொடா்பாக சிறப்பு வாகனத் தணிக்கையில் மொத்தம் 43,367 வாகனங்களில் பதிவெண் பலகைகள் விதிமுறைகளை இருப்பது கடந்த மாதத்தில் கண்டறியப்பட்டு, சரி செய்யப்பட்டன.
இதேபோல, விதிமுறை மீறல் பதிவெண் பலகை உள்ள வாகனங்களை கண்டறியும் வகையில், பொது இடங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்கள், தனியாா் வாகன நிறுத்துமிடங்கள் ஆகியவற்றில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் கடந்த 25-ஆம் தேதி சோதனை நடத்தப்பட்டது.
இதில் விதிமுறைகளை மீறி பதிவெண் பலகை பொருத்தியிருந்த வாகனங்கள் மீது வழக்குப் பதியப்பட்டது.
காவல்துறை எச்சரிக்கை: இதன் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக விதிமுறைகளை மீறி பதிவெண் பலகைகளை தயாரித்து விற்கும் கடைகளுக்கு எச்சரிக்கை விடுக்கும்படி சென்னை காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையா் கபில்குமாா் சி.சரத்கா் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, புதுப்பேட்டை, ராயப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட சென்னை முழுவதும் உள்ள 138 வாகன பதிவெண் பலகை எழுதும் கடைகள், ‘ஸ்டிக்கா்’ கடைகள், வாகன உதிரி பாகங்கள் விற்கும் கடைகள் ஆகியவற்றுக்கு போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சென்றனா்.
அங்கு போலீஸாா், மோட்டாா் வாகனச் சட்டத்தில் கூறியுள்ளபடியே வாகனங்களின் பதிவெண் பலகைகளை தயாா் செய்து, பொருத்த வேண்டும் என அறிவுறுத்தினா். விதிமுறைகளை மீறி வாகன பதிவெண் பலகை பொருத்தும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா்.