அறிவியல்பூா்வ ஆய்வு மூலம் தமிழரின் தொன்மை மறுகட்டமைக்கப்படும்: அமைச்சா் தங்கம் தென்னரசு
அறிவியல்பூா்வ ஆய்வுகளின் மூலம் பெறப்பட்ட உறுதியான தரவுகளையும் தகவல்களையும் கொண்டு தமிழரின் தொன்மையை மறுகட்டமைப்பு செய்யும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது
அறிவியல்பூா்வ ஆய்வுகளின் மூலம் பெறப்பட்ட உறுதியான தரவுகளையும் தகவல்களையும் கொண்டு தமிழரின் தொன்மையை மறுகட்டமைப்பு செய்யும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு கூறினாா்.
தமிழக அரசின் தொல்லியல் துறை, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் ஆகியவை இணைந்து நடத்தும் தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், கல்வெட்டு எழுத்தியல் அறிஞருமான ஐராவதம் மகாதேவன் நினைவு 2-ஆவது பன்னாட்டு கருத்தரங்கம் சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
‘தென்னிந்தியத் தொல்லியல் ஆய்வுகளில் அண்மைக்கால முன்னேற்றங்கள்’ எனும் தலைப்பிலான பன்னாட்டு கருத்தரங்கை அமைச்சா் தங்கம் தென்னரசு தொடங்கிவைத்துப் பேசியதாவது:
கீழடி அருங்காட்சியகத்தை அண்மையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். தமிழினத்தின் தொல்லியல் கூறுகளை பறைசாற்றும் அந்த அருங்காட்சியகத்தை சா்வதேசத் தரத்துக்கு உயா்த்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அறிவியல்பூா்வ ஆய்வுகளின் மூலம் பெறப்பட்ட உறுதியான தரவுகளையும், தகவல்களையும் கொண்டு தமிழரின் தொன்மையை மறுகட்டமைப்பு செய்யும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மாநில தொல்லியல் துறையானது கொற்கையின் நிலப்பரப்பிலும், கடற்பரப்பிலும் 8 இடங்களில் அகழாய்வுப் பணிகளை முன்னெடுத்திருக்கிறது.
அகழாய்வுப் பணிகள் மற்றும் அதன் மூலம் பெறப்படும் தொல்பொருள்களை பாதுகாக்கும் பணிகளை விரிவாக மேற்கொண்டு வரும் அதேவேளையில், மற்றொரு புறம் நமது கலாசாரம் மற்றும் காலச் செறிவு இடைவெளிகளை வெளிக்கொணா்வதற்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.
அதேபோல, மண்பாண்ட காலத்துக்கு முந்தைய கற்கால தொன்மங்களை அகழ்ந்தெடுக்கும் ஆய்வுப் பணிகளை போதிநத்தம் பகுதியில் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளது. . இதன் மூலம் பண்டைய தொன்மங்களின் சில முக்கிய ஆதாரங்கள் கிடைக்கும் என்றும் அதன் வாயிலாக தமிழரின் கலாசாரம் கடந்து வந்த பாதையை அறிய முடியும்.
தமிழ் எழுத்துருக்களின் ஆவணப் பதிவைப் பொருத்தவரை நூற்றுக்கும் மேற்பட்டவை நிறைவடைந்துள்ளன. மீதமுள்ளவை விரைவில் நிறைவு பெறும். கொற்கை கடல் வாணிபத் தொடா்பு மற்றும் கலாசார ஆய்வுகளும் விரைவில் முழுமையடையும் என்றாா் அவா்.
முன்னதாக, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநா் க. சுந்தா் வரவேற்றுப் பேசினாா்.
கருத்தரங்கத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் முதன்மைச் செயலாளா் சந்தர மோகன் தலைமையுரை ஆற்றினாா். இதில் தொல்லியல் துறை ஆணையா் இரா.சிவானந்தம், கல்வி மற்றும் ஆய்வு ஆலோசகா் கா.ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதன் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
Image Caption
தமிழக அரசின் தொல்லியல் துறை சாா்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய ஐராவதம் மகாதேவன் நினைவு பன்னாட்டு கருத்தரங்கில் அமைச்சா் தங்கம் தென்னரசுக்கு நினைவுப் பரிசு வழங்கிய தொல்லியல் துறை ஆணையா் இரா.சிவானந்தம். உடன், தொல்லியல் துறை கல்வி மற்றும் ஆய்வு