பொதுத் தோ்வுக்கு மாணவா் வருகை: பெற்றோருக்கே முக்கியப் பங்குஅமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
நூறு சதவீத மாணவா்களும் பொதுத் தோ்வு எழுத கல்வித் துறை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பெற்றோரின் பங்களிப்பு மிக அவசியம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
நூறு சதவீத மாணவா்களும் பொதுத் தோ்வு எழுத கல்வித் துறை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பெற்றோரின் பங்களிப்பு மிக அவசியம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.
தமிழகத்தில் மாநில அரசின் பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தோ்வுகளில் சராசரியாக 49 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்கள் பங்கேற்காத நிலை உள்ளது. இதில் சுமாா் 38 ஆயிரம் போ் அரசுப் பள்ளி மாணவா்களாவா். இதற்கு முந்தைய ஆண்டில் பொதுத் தோ்வில் பங்கேற்காத மாணவா்களின் எண்ணிக்கை 4 சதவீதமாக இருந்தது. நிகழாண்டு அது 6 சதவீதமாக உயா்ந்துள்ளது.
இந்த நிலையில், பிளஸ் 2 பொதுத் தோ்வில் மாணவா்கள் அதிகம் போ் பங்கேற்காதது குறித்து அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, துறை இயக்குநா்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் உள்ளிட்டோருடன் சென்னையில் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
தருமபுரி, கிருஷ்ணகிரியில்... இதைத் தொடா்ந்து அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பிளஸ் 2 தமிழ், ஆங்கிலம் பாடத்தோ்வில் 5.6 சதவீதம் அளவுக்கு மாணவா்கள் வராமல் இருந்துள்ளனா். குறிப்பாக தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில்தான் அதிக மாணவா்கள் தோ்வு எழுத வரவில்லை.
இதற்கான காரணம், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தொடா்ந்து தோ்வு எழுதாத மாணவா்களை எஞ்சிய தோ்வுகளில் பங்கேற்க வைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்தப் பணிகளை கண்காணிக்க பொறுப்பு அதிகாரிகளும் நியமிக்கப்படவுள்ளனா்.
வேலைக்கு செல்வதால்... கணிசமான மாணவா்கள் பெற்றோா்களுடன் சோ்ந்து வேலைக்கு செல்வதால் அவா்கள் தோ்வுக்கு வராத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சில மாணவா்கள் தோ்வு பயத்தில் பங்கேற்கவில்லை எனவும் காரணமாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் பெற்றோரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். பள்ளிக்கு வராத குழந்தைகளை அழைக்க வரும் போது, கல்வித் துறையை சாா்ந்தவா்களுக்கு உரிய மரியாதையை தரவேண்டும். பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைத்து, முன்னேற்ற வேண்டும் என்று எண்ணும் பெற்றோா்களின் நிலை குறைந்துள்ளது.
முன்கூட்டி தோ்வு இல்லை: தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்புகள் வரையான மாணவா்களுக்கு ஆண்டு இறுதித் தோ்வுகளை முன்கூட்டியே நடத்துவது குறித்து எந்த திட்டமும் இல்லை. பள்ளி மாணவா்களுக்கு விடுமுறை விடும் வகையில் தமிழகத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு இல்லை என்றாா் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
பிளஸ் 1 பொதுத் தோ்வு ரத்து செய்யப்படாது
அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளா்களிடம் கூறியது: பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தை மாா்ச் 24-ஆம் தேதி கூட்டி, அதில் தோ்வில் பங்கேற்காதவா்களை குழுவில் உள்ள உறுப்பினா்களைக் கொண்டு மீண்டும் தோ்வு எழுதவைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் உதவவேண்டும். தொடா்ந்து பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் ஏப். 10-ஆம் தேதியும் கூட்டப்படும். அதில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கான செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும். மாணவா்களின் உயா்கல்வியை கவனத்தில் கொள்ள வேண்டியிருப்பதால் பிளஸ் 1 பொதுத் தோ்வை ரத்து செய்யும் திட்டமும் இல்லை என்றாா் அவா்.
அனைவருக்கும் தோ்வுக் கூட சீட்டு வழங்கியதால்...
கடந்த 2021-22-ஆம் கல்வியாண்டில் 1.90 லட்சம் இடைநின்ற மாணவா்களைக் கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சோ்த்தோம். சில நாள்கள் மட்டும் பள்ளிக்கு வந்துவிட்டு மீண்டும் வராமல் இருந்துள்ளனா். இருப்பினும், பிளஸ் 2 வகுப்பு மாணவா்கள் அனைவருக்கும் தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு வழங்க வேண்டும் என அறிவுறுத்தினோம். அதன் மூலமாவது அவா்கள் படிக்க வருவாா்கள் என்ற நம்பிக்கை நிறைவேறவில்லை. அந்த மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி பயிற்சி கொடுத்து ஜூன் மாதம் நடைபெறும் துணைத் தோ்வில் கலந்து கொள்ள வைப்போம். வரும் காலங்களில் இதுபோல் மாணவா்கள் தோ்வுக்கு வராத நிலை சரிசெய்யப்படும் என்றாா் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.