சென்னை: சென்னையில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில், இரு ரெளடிகள் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை வண்ணாரப்பேட்டையில் மெத்தகுலோன் போதைப் பொருள் வைத்திருந்ததாக கடந்த 5 ஆம் தேதி 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அந்த போதைப் பொருள் கடத்தல் வழக்கில் வண்ணாரப்பேட்டை சேனி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஈஷா என்ற ஈஸ்வரன் (32), அதேப் பகுதியைச் சேர்ந்த ச. யுவராஜ் என்ற எலி யுவராஜ் (36) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார், இருவரையும் தேடி வந்தனர். ஆனால், அவர்கள் கடந்த ஒரு ஆண்டாக தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதி உத்தரவின்பேரில் இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் நடத்திய தீவிர விசாரணையில், இருவரும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்குச் சென்ற தனிப்படையினர், இருவரையும் திங்கள்கிழமை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஈஸ்வரன் மீது இரு கொலை வழக்குகள், கொலை முயற்சி வழக்குகள் உள்பட 15 வழக்குகளும், யுவராஜ் மீது 4 கொலை வழக்குகள் உள்பட 16 வழக்குகளும் இருப்பது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.
கடந்தாண்டு பதியப்பட்ட ஒரு போதைப் பொருள் வழக்கில் இருவரும் தலைமறைவாக இருந்து வந்ததும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட இருவரிடமும், போதைப் பொருள் கடத்தல் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.