மாணவி நந்தினிக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும்: முதல்வர் ஸ்டாலின்
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவி நந்தினிக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவி நந்தினிக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. இத்தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி நந்தினி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 6 பாடங்களிலும் முழு மதிப்பெண்கள் வீதம் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.
இவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின்,
"கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து" என்று பல நிகழ்ச்சிகளிலும் நான் கூறி வருகிறேன்.
நேற்று வெளியான +2 பொதுத்தேர்வு முடிவில் 600/600 பெற்றுச் சாதனை படைத்துள்ள மாணவி நந்தினியும் "படிப்புதான் சொத்து என்று நினைத்துப் படித்தேன்" எனப் பேட்டியில் கூறியதைக் கண்டு பெருமையடைந்தேன். அவரை இன்று நேரிலும் அழைத்து வாழ்த்தினேன். அவரது உயர்கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நமது அரசே செய்து தரும் என்ற உறுதியையும் வழங்கியுள்ளேன்.
எளிய குடும்பப் பின்னணி கொண்ட நந்தினி போன்றோர் தங்கள் உழைப்பால் அடையும் உயரங்கள்தான் நம் தமிழ்நாட்டின் அடையாளம்.” என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிகழ்வின்போது, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வித் துறை ஆணையர் க. நந்தகுமார், அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் மாணவியின் பெற்றோர்கள் உடனிருந்தனர்.