செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 8-வது முறையாக நீட்டிப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 20 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று(வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.
அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை அக். 20-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டிப்பது இது 8-ஆவது முறையாகும்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள், செந்தில் பாலாஜியை கைது செய்தனா். பின்னா், அவரை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனா். விசாரணை முடிந்து, ஆக. 12-ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினா் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல், கடந்த செப். 29-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆஜா்படுத்தப்பட்டாா். இதைத்தொடா்ந்து, அவரது நீதிமன்ற காவலை அக். 13 வரை நீட்டித்து சென்னை முதன்மை அமா்வு நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தாா்.
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்ததையடுத்து, சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிபதி லிங்கேஸ்வரன் முன் புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் ஆஜா்படுத்தப்பட்டாா். அவரது நீதிமன்றக் காவலை அக். 20-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா்.
செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவல் 8-ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கு வரும் திங்கள்கிழமை சென்னை உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது