நடிகை கெளதமி 
தமிழ்நாடு

பாஜகவில் இருந்து நடிகை கெளதமி விலகல்: காரணம் என்ன?

பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகுவதாக நடிகை கெளதமி திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.

DIN

சென்னை: பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகுவதாக நடிகை கெளதமி திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மீது குற்றச்சாட்டு எழுப்பிய நடிகை காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து விலகிய நிலையில், தற்போது கெளதமியின் விலகல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கெளதமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“கனத்த இதயத்துடனும், கடும் அதிருப்தியுடனும் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ளேன். தேசத்தின் வளர்ச்சிக்காக 25 ஆண்டுகளுக்கு முன்னதாக பாஜகவில் இணைந்தேன். எனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல சவால்களை சந்தித்தாலும், எனது கட்சிப் பணியை மேற்கொண்டேன். ஆனால், எனக்கு நம்பிக்கை துரோகம் செய்து எனது பணத்தை ஏமாற்றிய நபருக்கு கட்சித் தலைவர்களின் சிலர் ஆதரவளித்து வருவது தற்போது எனக்கு தெரிய வந்துள்ளது.

எனது 17 வயது முதல் நான் சினிமா, தொலைக்காட்சி உள்ளிட்டவற்றின் மூலம் 37 ஆண்டுகாலம் பணியாற்றி உள்ளேன். பொருளாதார ரீதியாக பாதுகாப்பை உறுதி செய்யவும், எனது மகளின் எதிர்காலத்துக்கு உதவுவதற்காகவும் உழைத்துள்ளேன். ஆனால், சி.அழகப்பன் என்பவர் என்னுடைய அனைத்து சொத்து, பணம் மற்றும் ஆவணங்களை ஏமாற்றிவிட்டார்.

பெற்றோர்களை இழந்து கைக் குழந்தையுடன் ஆதரவற்றவளாக நிற்கும்போது, எனது பலவீனம் மற்றும் தனிமையை பயன்படுத்தி 20 ஆண்டுகளுக்கு முன்பு அழகப்பன் என்னை அணுகினார். எனது வாழ்க்கையில் அக்கறையுள்ள மூத்த நபராக இருந்த அவரிடம், என்னுடைய சில நிலங்களை விற்பதற்காக ஆவணங்களை அவரிடம் கொடுத்தேன். ஆனால், அவர் என்னை ஏமாற்றியது குறித்து சமீபத்தில்தான் அறிந்தேன்.

நான் கஷ்டப்பட்டு உழைத்த பணம், சொத்து, ஆவணங்களை மீட்க சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொண்டேன். முதல்வர், காவல்துறை, நீதித்துறை மீது முழு நம்பிக்கை வைத்து தொடர்ந்து பல புகார்களை அளித்தேன். ஆனால், தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

2021 சட்டப்பேரவை தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் வாய்ப்பு தருவதாக உறுதி அளிக்கப்பட்டு, பின்னர் கடைசி நேரத்தில் வாய்ப்பு அளிக்கவில்லை. இருப்பினும் கட்சிப் பணிகளை தொடர்ந்தேன்.

இந்த நிலையில், 25 ஆண்டுகள் தொடர்ந்து விசுவாசமாக இருந்தபோதும், என்னை ஏமாற்றிய அழகப்பனுக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள் உதவி செய்திருப்பதை அறிந்து நொறுங்கிப் போனேன்.

மிகுந்த வலி மற்றும் வேதனையுடனும், கடும் உறுதியுடனும் இந்த ராஜிநாமா கடிதத்தை எழுதுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக மாநகரச் செயலாளரின் ஜாமீன் மனு: கரூர் நீதிமன்றத்தில் தள்ளுபடி!

ஒன்பிளஸ் நோர்டு 6 விரைவில் அறிமுகம்! சிறப்பம்சங்கள் என்னென்ன?

நீதிபதி மீது காலணி வீசி கடவுள்தான் என்னைத் தூண்டினார்! - வழக்குரைஞர் Rakesh Kishore | B.R. Gavai

ஆரஞ்ச் அலர்ட்.... சங்கீதா!

சத்தீஸ்கரில் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 16 மாவோயிஸ்டுகள் சரண்!

SCROLL FOR NEXT