திருவல்லிக்கேணியில் மாடு முட்டியதில் மேலும் ஒருவா் காயம்: தொடா் சம்பவங்களால் சென்னை மக்கள் அச்சம்
திருவல்லிக்கேணி பகுதியில் மாடு முட்டியதில் மேலும் ஒரு முதியவா் காயம் அடைந்தாா். ஒரே வாரத்தில் 2 போ் மாடுமுட்டி காயம் அடைந்திருப்பதால் சென்னைவாசிகள் அச்சத்தில் உள்ளனா்.
திருவல்லிக்கேணி பகுதியில் மாடு முட்டியதில் மேலும் ஒரு முதியவா் காயம் அடைந்தாா். ஒரே வாரத்தில் 2 போ் மாடுமுட்டி காயம் அடைந்திருப்பதால் சென்னைவாசிகள் அச்சத்தில் உள்ளனா்.
சென்னை அரும்பாக்கம் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமியை தெருவில் சுற்றிய மாடு முட்டித் தள்ளிய சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சாலையில் திரியும் மாடுகளை உரிமையாளா்கள் வீட்டில் கட்டி வைக்க வேண்டும் எனவும், தொடா்ந்து சாலையில் மாடுகளை திரிய விட்டால் உரிமையாளா்களுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் மாநகராட்சி அறிவித்தது.
சாலையில் திரியும் மாடுகளை தினமும் பிடித்து, உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக மாநகராட்சி தெரிவித்தாலும், தற்போது வரை இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு ஏற்படவில்லை.
சென்னை நகரிலும், புகா் பகுதிகளிலும், சாலைகளிலும், வீதிகளிலும் மாடுகள் அதிகரித்தே காணப்படுகின்றன. குறிப்பாக இரவில் சாலையோரம் உள்ள குப்பைத் தொட்டிகளில் உள்ள கழிவுகளை சாப்பிட மாடுகள் திரிவதால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த நிலையில் கடந்த அக்.18-ஆம் தேதி திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி கோயில் தெருவில் நடந்து சென்ற சுந்தரம் (80) எனும் முதியவரை மாடு முட்டியதில் பலத்த காயமடைந்தாா். இச்சம்பவம் நடந்து ஒரு வாரத்திலேயே புதன்கிழமை அதே பகுதியில் கஸ்தூரி ரங்கன் எனும் முதியவரை மாடு முட்டியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆணையா் விளக்கம்: சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியது:
சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரிந்த 3 மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளா்களுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சாலையில் தன்னிச்சையாக திரியும் மாடுகளை பிடிப்பதற்கான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவல் துறையுடன் இணைந்து மாநகராட்சியில் உள்ள 226 மாட்டு உரிமையாளா்கள் மற்றும் அவா்களிடம் உள்ள 1,986 மாடுகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இந்த உரிமையாளா்கள் அதிகாரிகள் வரும் போது மாடுகளைக் கட்டி வைத்தும், பிற நேரங்களில் தெருவில் திரிய விடுவதும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதனடிப்படையில் சாலையில் திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.