முகப்பு
தமிழ்நாடு

வலங்கைமானில் பட்டாசுகள் வெடித்து திடீர் தீ விபத்து!

வலங்கைமானில் பட்டாசுகள் வெடித்து திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:19 PM
பகிர்:

வலங்கைமானில் பட்டாசுகள் வெடித்து திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

நீடாமங்கலம்: வலங்கைமான் கீழத்தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (50). இவர் தனது வீட்டின் முன்புறத்தில் பட்டாசுக் கடை வைத்துள்ளார். கடையில் பட்டாசுகளை இருப்பு வைத்து  பட்டாசு விற்பனை செய்து வருகிறார். வீட்டின் பின்புறத்தில் தனியாக ஒரு இடத்தில் பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த பட்டாசுகளில் திங்கள்கிழமை இரவு  10 மணியளவில் திடீரென தீ பிடித்தது. சில நிமிடங்களில் பலத்த பட்டாசு வெடிக்கும் சத்தம் வலங்கைமான் முழுமைக்கும் கேட்டது. தகவலறிந்த மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் உத்தரவின் பேரில் மாவட்ட உதவி அலுவலர் இளஞ்செழியன் மேற்பார்வையில் வலங்கைமான் நிலைய அலுவலர் மார்த்தாண்டபூபதி, குடவாசல் நிலைய அலுவலர் ஜோதிபாசு மற்றும் தீயணைப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை மேலும் பரவாமல் காத்தனர்.

நள்ளிரவு வரை தீயணைக்கும் பணி நடந்தது. தீயணைப்புப் படை வீரர்கள் தீயை, இரண்டு மணி நேரத்திற்கும் மேல் போராடி அணைக்க வேண்டியதாயிற்று. இதனால் வலங்கைமான் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமானோர் அப்பகுதியில் கூடினர்.

வலங்கைமானில் பட்டாசு விற்பனை  செய்யும் கடையின் பின்புறம் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த  இடம்.

தகவலறிந்த வலங்கைமான் காவல் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தீயில் எரிந்த பட்டாசுகளின் சேதமதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் எனத் தெரிகிறது.

தீ விபத்துக்கான காரணம் மின்கசிவாக இருக்கலாம் என கூறப்படுகிறது. வலங்கைமானில் பட்டாசுகள் தயாரித்து விற்பனை செய்யும் தொழில் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. வலங்கைமானில் 12 இடங்களில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு 28 இடங்களில் பட்டாசு விற்பனை நடைபெற்று வருகிறது.

சில நாள்களுக்கு முன்பு  பட்டாசு தயாரிப்பு நிலையங்கள் மற்றும் பட்டாசுக் கடைகளில் அளவுக்கு அதிகமாக பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு காவல் துறையினரால் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு  மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த இரு வருடங்களாக வலங்கைமான் பட்டாசு தயாரிப்பு நிலையங்களில் காவல் துறையினரின் சோதனை நடவடிக்கையும், அளவுக்கு அதிகமான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்படும் நடவடிக்கையும் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.